முதலைக் கண்ணீர் உண்மையாகலாம்: சென்னை முதலைப் பண்ணையின் தற்போதைய நிலை

சென்னையில் உள்ள முதலைப் பண்ணைக்கு வரும் வருவாய் நின்றதால், பண்ணையைப் பராமரிக்கப் போதிய நிதியில்லாமல் சென்னை முதலைப்பண்ணை அறக்கட்டளை தவித்து வருகிறது.
முதலைக் கண்ணீர் உண்மையாகலாம்: சென்னை முதலைப் பண்ணையின் தற்போதைய நிலை


சென்னை: சென்னையில் உள்ள முதலைப் பண்ணைக்கு வரும் வருவாய் நின்றதால், பண்ணையைப் பராமரிக்கப் போதிய நிதியில்லாமல் சென்னை முதலைப்பண்ணை அறக்கட்டளை தவித்து வருகிறது.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 44 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதலைப் பண்ணை 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் ரோம் விடாகர். சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

இந்த முதலைப் பண்ணையில் சுமார் 2000 வகையான முதலைகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஆமைகள், அரியவகை பல்லி, டிராகன், பாம்பு வகைகளும் உள்ளன.

இது பற்றி பண்ணையின் இயக்குநர் ஆல்வின் ஜேசுதாஸன் கூறுகையில், இந்த பண்ணை மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இது ஜூன் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு வேளை கரோனா பாதிக்காமல் இயல்பு நிலையில் இருந்திருந்தால் இதுவரை 1.20 லட்சம் பார்வையாளர்கள் வந்திருப்பார்கள். ஊரடங்கால் சுமார் 80 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பண்ணையை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.4.5 கோடி செலவாகும். அனுமதிச் சீட்டு மூலம் கிடைக்கும் வருவாய் தவிர்த்து, அறக்கட்டளைக்கு வரும் நன்கொடைகள் மூலமாகவும் வருவாய் ஈட்டப்பட்டு வந்தது. ஊரடங்கால் பெரும்பாலும் உலகளவில் இருந்து பெறப்படும் நன்கொடைகளும் பெரிய அளவில் குறைந்துவிட்டன.

கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து நன்கொடைகளும் நின்றுவிட்டன. வருவாய் நின்றுபோனதோடு, அடுத்த மாதத்தில் பண்ணையைத் திறக்கும் போது கிருமிநாசினிகளை வாங்குவது உள்ளிட்ட பராமரிப்பு செலவும் அதிகரிக்கும் என்பது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே மூத்த ஊழியர்கள் ஊதியக் குறைப்பை ஏற்றுக் கொண்டு விட்டனர். தற்போது முதலைப் பண்ணைக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்கிறார்.

விரைவில் போதிய நிதி திரட்டப்பட்டு, பசிக்காக முதலைகள் உண்மையிலேயே கண்ணீர் விடும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது என்பதே ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com