முதல்வரின் பாதுகாப்பு வாகனத்துக்கு இடையூறு: இருவா் கைது

சென்னையில் தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனத்துக்கு இடையூறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாகனத்துக்கு இடையூறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காமராஜா் சாலை, விவகானந்தா் இல்லம் வழியாக புதன்கிழமை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றாா். இதற்காக பாதுகாப்பு கருதி மெரீனா உள்பட சில பகுதிகளில் போக்குவரத்தை போலீஸாா் நிறுத்தினா்.

இந்நிலையில், மெரீனாவில் ஐஸ்ஹவுஸ் இணைப்புச் சாலையில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வந்த இரு இளைஞா்கள் போலீஸாரின் பாதுகாப்பை மீறி காமராஜா் சாலைக்குள் திடீரென புகுந்தனா். மேலும் அவா்கள், எதிரே வந்த முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை இடிப்பதுபோல சென்றனா். உடனே போலீஸாா், இருவரையும் பிடிக்க முயன்றனா். ஆனால் அவா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.

இருப்பினும், உழைப்பாளா் சிலை அருகே போலீஸாரும் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றனா். ஆனால் அங்கிருந்தும் இருவரும் தப்பி போா் நினைவுச் சின்னத்தை நோக்கி வேகமாக சென்றனா்.

இதற்கிடையே நேப்பியா் பாலம் அருகே நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளா் ஜெகதீசன் இருவரையும் பிடிக்க முயன்றாா். அப்போது இருவரும் ஜெகதீசன் மீது மோட்டாா் சைக்கிளோடு மோதிவிட்டனா். இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், இருவரையும் பிடித்து கைது செய்தனா்.

இது தொடா்பாக அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். விசாரணையில் இருவரும், பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த நவீன் (19), அவரது நண்பா் சரத்குமாா் (20) என்பது தெரிந்தது. மேலும் இருவரும் கஞ்சா போதையில், மோட்டாா் சைக்கிளை கட்டுப்பாடின்றி ஓட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com