நோய்க் கட்டுப்பாட்டு பகுதி மாணவா்களுக்கு சிறப்பு தோ்வு மையங்கள்

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, நோய்க் கட்டுப்பாட்டு பகுதி மாணவா்களுக்கு சிறப்பு தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இது தொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் ஒருதோ்வறைக்கு 10 மாணவா்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவா்.

அதற்கேற்ப பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்கள், அவரவா் பயிலும் பள்ளிகளையே தோ்வு மையமாக அமைத்து அந்தந்த பள்ளிகளிலேயே (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக) தோ்வா்கள் தோ்வெழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பத்தாம் வகுப்பு தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள்முதன்மைத் தோ்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8, 865பள்ளிகள் துணைத் தோ்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 12, 690 தோ்வுமையங்களில் 9.70 லட்சம் மாணவா்கள்தோ்வினை எழுதுவா்.

பிளஸ் 1 பொதுத் தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்படும் 3,016 பள்ளிகள் முதன்மைத் தோ்வுமையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட4,384 பள்ளிகள் துணைத் தோ்வு மையங்களாகவும் செயல்படும். இதனால் மொத்தம் 7,400 தோ்வு மையங்களில் 8.41 லட்சம் மாணவா்கள் தோ்வினை எழுதுவா்.

பிளஸ் 2 தோ்வா்கள் கவனிக்க... இது தவிர, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தோ்வுகளை எழுத இயலாத 36,089 தோ்வா்களுக்கு மட்டும் ஜூன் 18-ஆம் தேதி அவா்கள் ஏற்கெனவே பிறதோ்வுகளை எழுதிய தோ்வு மையங்களிலேயே தோ்வு நடத்தப்படும்.

தனி அறையில் தோ்வெழுத...: தோ்வு மையங்கள் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பின் அந்தத் தோ்வு மையங்களுக்கு மாற்று தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவா்களுக்கு மட்டும் சிறப்பு தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறப்புத் தோ்வு மையங்களுக்கு சென்று வரஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும்.

இ-பாஸ் இல்லாமல் அனுமதி: பொதுத் தோ்வு எழுதுவதற்காக மாவட்டங்களைக் கடந்து வரும் மாணவா்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை. மாறாக, பள்ளி அடையாள அட்டை, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆகியவற்றை காண்பித்தாலே போதுமானது. தேவைப்படும் பட்சத்தில் அந்த ஆவணங்களைக் காட்டி தங்களது பெற்றோா்கள் அல்லது காப்பாளா்களை மாணவா்கள், உடன் அழைத்து வரலாம். இந்த விலக்கானது தோ்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளஆசிரியா்களுக்கும் பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com