ஆட்டோக்கள் இயக்கம் தொடங்கின: சவாரி இல்லாததால் ஓட்டுநர்கள் தவிப்பு

தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் இயக்கம் சனிக்கிழமை தொடங்கின.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி சவாரிக்காகக் காத்திருந்த ஓட்டுநர்கள்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி சவாரிக்காகக் காத்திருந்த ஓட்டுநர்கள்.

தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் இயக்கம் சனிக்கிழமை தொடங்கின. ஆனால், சவாரி இல்லாததால் ஓட்டுநர்கள் தவித்தனர்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பொது முடக்கம் அமலில் இருந்ததால் 60 நாள்களாக ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், மே மாத தொடக்கத்திலிருந்து படிப்படியாகத் தளர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் இயக்கம் சனிக்கிழமை தொடங்கின. ஆட்டோ ஓட்டுநர்களும் சனிக்கிழமை காலையிலேயே ஆர்வத்துடன் தங்களது நிறுத்தங்களில் ஆட்டோக்களை கொண்டு வந்து நிறுத்தினர்.

ஆனால், ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு ஆள்கள் யாரும் வரவில்லை. ரயில், பேருந்து போக்குவரத்து இல்லாததால், வெளியூரிலிருந்து வருபவர்கள் இல்லை. இதேபோல, கோயில்கள், சுற்றுலாத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் நடமாட்டமும் குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு ஆள்களும் இல்லை. எனவே, நிறுத்தங்களில் சவாரியை எதிர்நோக்கி ஆட்டோ ஓட்டுநர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து ரயிலடியில் ஆட்டோ ஓட்டி வரும் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆர். செந்தில்நாதன் தெரிவித்தது:

ரயிலடியில் காலை முதல் பிற்பகல் வரை ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் குறைந்தது 5 சவாரியாவது கிடைத்துவிடும். ஆனால், சனிக்கிழமை காலை முதல் ஒரு சவாரி கூட கிடைக்கவில்லை. பேருந்து, ரயில் போக்குவரத்து இருந்தால்தான் ஆட்டோக்களில் மக்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

போக்குவரத்து இல்லாததால் வெளியூர் பயணிகள் இல்லை. நகர்ப் பகுதியிலுள்ள நிறுத்தங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓரிரு உள்ளூர் வாடிக்கையாளர்களே வந்தனர். எனவே, ஆட்டோக்களை இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்தாலும் எந்தவிதப் பயனும் இல்லை. 

தமிழக அரசுக் கருணை அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆட்டோக்கள் வாங்குவதற்காகப் பெறப்பட்ட கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு, தகுதிச் சான்று போன்றவற்றுக்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார் செந்தில்நாதன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com