சொட்டு நீர் பாசனம் மூலம் ஏக்கருக்கு 12 டன் தர்பூசணி மகசூல்

சீர்காழி அருகே கரோனா பொது முடகத்தால் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை வென்று சொட்டுநீர் பாசனம் மூலம் ஏக்கருக்கு 12 டன் தர்பூசணி மகசூல் செய்து சாதனை புரிந்த விவசாயியை தோட்டக்கலைத் துறையினர் பாராட்டினர்
விவசாயி குலசேகரனுக்கு பாராட்டு தெரிவிக்கும் அதிகாரிகள்.
விவசாயி குலசேகரனுக்கு பாராட்டு தெரிவிக்கும் அதிகாரிகள்.

சீர்காழி அருகே கரோனா பொது முடகத்தால் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை வென்று சொட்டுநீர் பாசனம் மூலம் ஏக்கருக்கு 12 டன் தர்பூசணி மகசூல் செய்து சாதனை புரிந்த விவசாயியை தோட்டக்கலைத் துறையினர் பாராட்டினர். 

நாகை  மாவட்டம் சீர்காழியை அடுத்த கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலசேகரன் விவசாயி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். வறட்சியான பகுதி என்பதால் நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்படுவதால் நீரைச் சேமிக்க ஆண்டு தோறும் தர்பூசணி விதைகள் நடவு செய்த பின் அறுவடை வரை தினமும் ஆட்களைக் கொண்டு குடங்கள் மூலம் ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றியே பயிர் செய்து வந்தார். 

இதனால் ஏற்பட்ட கால விரையம் மற்றும் பண விரையத்தை தடுக்க மாற்று வழிதேடி சீர்காழி அரசு தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை நாடினார். அப்போது அதிகாரிகள் மானியத்துடன் கிடைக்கும் சொட்டு நீர்ப் பாசன அமைப்பு குறித்தும் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர். உடனே தனது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவ குலசேகரன் விண்ணப்பித்தார். அதன்படி கடந்த மார்ச் மாதம் தோட்டக்கலைத் துறை மூலம் அவரது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு நிறுவப்பட்டது. 

ஊர்க்காரர்கள் சிலர் இத்தனை ஆண்டுக்காலம் செய்யாத சாகுபடியை இந்த முறை செய்யப் போகிறாயா? எனக் கிண்டல் பேசியதை புறந்தள்ளி தர்பூசணி சாகுபடியை துவங்கினார் விவசாயி குலசேகரன். மூன்று மாத கால பயிரான தர்பூசணி 65 நாட்களிலேயே அறுவடை பருவத்தை எட்டியதுடன் நல்ல மகசூலையும் கொடுத்துள்ளது. இதுவரை ஏக்கருக்கு 6 டன் மட்டுமே மகசூல் கிடைத்த நிலையில் இந்தாண்டு 12 டன் மகசூல் கிடைத்துள்ளதாகவும் ஒரு பழம் 15 கிலோ வரை எடை நிற்பதால் அதிக லாபம் கிடைத்ததாகவும் மகிச்சியோடு தெரிவிக்கிறார் விவசாயி குலசேகரன்.

சொட்டுநீர் பாசனம் மூலம் 12 டன் தர்பூசணி மகசூல் செய்த விவசாயி நிலம்.
சொட்டுநீர் பாசனம் மூலம் 12 டன் தர்பூசணி மகசூல் செய்த விவசாயி நிலம்.

சொட்டு நீர் பாசனம் மூலம் கடும் வறட்சி, தண்ணீர் சிக்கனம், உரங்கள் இடும் நேரம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை என அனைத்து தடைகளையும் தாண்டி நல்ல மகசூல் பெறமுடியும் என நம்பிக்கை தெரிவித்த குலசேகரன் மற்ற விவசாயிகளும் சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சுற்றியுள்ள வயல்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கும் நிலையில் சொட்டுநீர் பாசனம் மூலம் 15 கிலோ எடை கொண்ட பழங்களையும் ஏக்கருக்கு 12 டன் மகசூலையும் பெற்றுச்  சாதித்த விவசாயி குலசேகரனை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பொன்னி, உதவி அலுவலர் செல்வராஜ், குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com