பணி வரன்முறை எதிர்பார்ப்பில் 7,700 செவிலியர்கள் 

இரண்டு ஆண்டுகளில் பணி வரன்முறை செய்யப்படும் என்ற அரசின் உத்தரவாதம் 4 ஆண்டுகளாகியும் நிறைவேறாததால், தமிழகத்தில்
பணி வரன்முறை எதிர்பார்ப்பில் 7,700 செவிலியர்கள் 


திண்டுக்கல்: இரண்டு ஆண்டுகளில் பணி வரன்முறை செய்யப்படும் என்ற அரசின் உத்தரவாதம் 4 ஆண்டுகளாகியும் நிறைவேறாததால், தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்த 7,700 செவிலியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

கரோனா  தீநுண்மி தொற்று பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு தொய்வின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. 

கரோனா தொற்று  ஏற்பட்ட அசாதாரண சூழலிலும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் செவிலியர்களின் பணி சவால் நிறைந்ததாக இருந்து வருகிறது. கரோனா சிறப்பு வார்டுகள் மட்டுமின்றி, அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைவதற்கே பெரும்பாலானோர் அச்சமடைந்த நிலையில், நோயாளிகளுடனே பணி நேரம் முழுவதும் இருந்து நம்பிக்கை ஏற்படுத்தியவர்கள் செவிலியர்கள். 

4 ஆண்டுகளாகியும் நிறைவேறாத அறிவிப்பு: கடந்த 2015-ஆம் ஆண்டு சுமார் 7,700 செவிலியர்கள், மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 30 சதவீதம் பேர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியமர்த்தப்பட்டனர். 

தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்த  செவிலியர்கள், தகுதி, முன்னுரிமை அடிப்படையில் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் தொகுப்பூதிய பணியாளர்களாகவே, செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஊதியம் தாமதம்: கரோனா தீநுண்மி தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழலில் சிறப்பாக பணிபுரிந்தால், தங்களுடைய பணி நிரந்தரம் தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என்று செவிலியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது வரை அதுதொடர்பான எவ்வித அறிவிப்பும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை. மேலும் தங்களுக்கான ஊதியமும் காலதாமதமாக வழங்கப்படுவதால் செவிலியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே  கடந்த டிசம்பரில்  3 ஆயிரம் பேரும், கரோனா  சிறப்பு  சிகிச்சைக்காக  சுமார்  2 ஆயிரம் பேரும் தொகுப்பூதிய அடிப்படையில்  செவிலியர் பணியில்  தமிழகம் முழுவதும்  பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் ரசு ஆரம்ப  சுகாதார  நிலையங்களில்  பணிபுரிந்து  வரும்  தொகுப்பூதிய செவிலியர்களுக்கு  பிரதி  மாதம்  5-ஆம்  தேதிக்குள் ஊதியம்  வழங்கப்படுகிறது.  ஆனால், அரசு  மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய  செவிலியர்களுக்கு  மாதம்தோறும்  20-ஆம் தேதிக்கு  பின்னரே ஊதியம்  வழங்கப்படுவதாக புகார்  தெரிவிக்கின்றனர்.

விடுப்புச் சலுகையும் இல்லை: இதுதொடர்பாக தொகுப்பூதிய  அடிப்படையில் பணிபுரியும்  செவிலியர்கள்  கூறியது: 
தொகுப்பூதிய செவிலியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகளான நிலையில், பணி வரன்முறை செய்வதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவப் படி, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட எவ்வித நிதி தொடர்பான சலுகைகளும் எங்களுக்கு வழங்குவதில்லை.

அதேபோல் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற விடுப்புச் சலுகையும் கிடையாது. மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மட்டும் வழங்கப்படுகிறது. கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கடந்த மாதத்திற்கான ஊதியமே இதுவரை கிடைக்காத நிலையில், அரசு அறிவித்த ஊக்கத் தொகையும் செவிலியர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் அரசு அறிவித்தபடி, தொகுப்பூதிய செவிலியர்களை பணி வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com