சென்னையில் ரயில், பேருந்து போக்குவரத்தை இயக்கக் கூடாது: மருத்துவக் குழு பரிந்துரை

சென்னையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னையில் ரயில், பேருந்து போக்குவரத்தை இயக்கக் கூடாது: மருத்துவக் குழு பரிந்துரை


சென்னை: சென்னையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவது சரியாக இருக்காது என்று தமிழக அரசுக்கு மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அரசு தங்கள் தரப்பில் என்னென்ன பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டது என்பது குறித்து மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த தொற்றுநோய் தடுப்பு நிபுணர், மருத்துவர் குகானந்தம் கூறியதாவது, தமிழகத்தில் 4 மாவட்டங்களைத் தவிர்த்து தளர்வுகளைத் தர மருத்துவக் குழு பரிந்துரை அளித்துள்ளது. கரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீடிக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் சென்னையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தைத் தொடங்குவது சரியாக இருக்காது, அதனால் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க வேண்டியது வரும் என்றும் பரிந்துரை அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடகங்களுக்கு நன்றி. அதே சமயம், தற்போது மக்கள் மத்தியில் பொறுப்பையும், தற்போதிருக்கும் சூழலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்து மூன்றரை முதல் நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. முகக்கவசம் அணிவது, கைகழுவது போன்றவை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

இவ்வளவு கடும் முயற்சியால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 4, 5, 6 மண்டலங்களில் மக்களின் வாழ்விடங்கள் நெருக்கமாக இருக்கும். அவர்களுக்கு கரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும்.

மிக முக்கியமாக ஒவ்வொருவரும், தங்கள் குடும்பங்களில் இருக்கும் வயதானவர்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதிலும், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய் இருப்பவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்றவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தால் அவர்களை குணப்படுத்த முடியும்.

தமிழகத்தில் கரோனா மொத்த பாதிப்பில 77% சென்னை உட்பட 4 மாவட்டங்களில்தான் இருக்கிறது. எனவே, சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்க பரிந்துரை செய்துள்ளோம்.

மேலும், சென்னையில் பொதுப் போக்குவரத்தை தளர்த்தினால் ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே தற்போதைய சூழலில் சென்னையில் ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என்று பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com