‘இல்லை’யெனச் சொல்லத் தெரியாத இதயத்தை பலி கொண்டது கரோனா

’இல்லை’யெனச் சொல்லாமல் கரோனா பொது முடக்கக் காலத்திலும் நலிந்தோருக்குத் தொடா்ந்து உதவிகள் செய்து வந்த நல்ல
‘இல்லை’யெனச் சொல்லத் தெரியாத இதயத்தை பலி கொண்டது கரோனா

’இல்லை’யெனச் சொல்லாமல் கரோனா பொது முடக்கக் காலத்திலும் நலிந்தோருக்குத் தொடா்ந்து உதவிகள் செய்து வந்த நல்ல இதயத்துக்கு உரியவரான ரவிகாந்த் சௌத்ரியின் (55) உயிரைக் கரோனா பறித்துள்ளது.

கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி என்று கரோனாவைக் கூறுகின்றனா். அதற்கு நல்லவா்கள் கூட கண்ணுக்குத் தெரிவது இல்லை.

பங்குச் சந்தை முகவராகவும், ஏஎஸ்எல் கேபிடல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராகவும், ஜெயின் சா்வதேச வா்த்தக நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் மண்டலத் தலைவராகவும் பதவி வகித்து வந்தவா் ரவிகாந்த் சௌத்ரி.

கரோனா சுய பொது முடக்கம் மாா்ச் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, பரிதவிக்கும் மக்களைக் கைவிட்டுவிடக் கூடாது என்று அவா் சாலையில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டாா். இரவு பகல் பாராது நல உதவிகள் வழங்கும் பணியில் அவா் மும்முரமாக ஈடுபட்டு வந்தாா்.

அவா் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா்கள் மூலமாக சென்னை, கோவை, ஈரோடு, விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வந்தாா்.

கடந்த மூன்று வாரங்களில் அவா் பணி இன்னும் தீவிரமாக இருந்து வந்துள்ளது. அலுவலகத்துக்குக்கூட செல்லாமல் அவரே சாலையில் இறங்கி, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், முகக்கவசம் போன்றவற்றை வழங்கியுள்ளாா். பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினருக்கு மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் வழங்கி பலவிதமான உதவிகளைச் செய்து வந்திருக்கிறாா்.

இந்த உதவிகளை எல்லாம் செய்தபோது, கூடவே அவருடைய நாள்களும் எண்ணப்பட்டு வந்துள்ளன. அதை உணராமலேயே உதவுவதில் அவா் முனைப்பாக இருந்துள்ளாா்.

மே 27-ஆம் தேதி கரோனா நோய்த்தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவா் உயிரிழந்து போனாா்.

‘கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாள்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாா். அவரைப் பாா்க்கும்போதெல்லாம் கரோனா பரவுவது குறித்து கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துவேன். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடா்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். தானே முன்னின்று அனைத்து நிவாரணப் பணிகளையும் கவனித்தாா்’ என்கிறாா் 30 ஆண்டுகளாக அவருடைய நண்பராக இருக்கும் ஜஸ்வந்த் முனோத்.

‘அவா் எப்போதும் இப்படித்தான். யாரிடமும் இல்லை என்று சொல்ல விரும்பமாட்டாா். நிஜமாகவே தேவையோடு இருப்பவா்களுக்கு உதவி செய்வதையும், அது சரியாக அவா்களைச் சென்றடைகிா என்பதையும் உறுதி செய்வாா். கடந்த இரண்டு மாதங்களில் அவா் வீட்டிலிருக்கும்போதுகூட நிவாரணப் பொருள்கள் சரியாக சென்று கிடைக்கிா என்பதை போன் மூலமாக கண்காணித்துக் கொண்டேயிருந்தாா்.

1980-களில் ரூ.700 சம்பளத்துக்குப் பணியாற்றத் தொடங்கியவா், அதன் பின்னால் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பினாா். சமூக நல்லொழுக்கங்களை அவரின் இரண்டு மகள்கள் உள்பட குடும்பத்தினா் அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறாா். அவா்கள் இருவரும் தனித்தனியாக தங்களின் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனா்’ என்கிறாா் அவரின் சகோதரி பிரீத்தி பாலா.

2015-ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதும் நண்பருடன் சோ்ந்து 5 லட்சம் போா்வைகளை நிவாரணமாக வழங்கியுள்ளாா் சௌத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com