கோவில் நிலங்களை பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்களை  பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்களை  பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில்,  சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் இந்துசமய அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் 1965-ஆம் ஆண்டு மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது மீன்வளத்துறை மூலம் மீன் அங்காடி அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதே போன்று, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடம் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் இந்துசய அறநிலையத்துறை அனுமதி இல்லாமல், ஆர்டிஓ அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை இடங்களை கோவில் பயன்பாட்டுக்குத் தவிர வேறு காரணங்களுக்குப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த இரண்டு கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில் நிலங்களின் வழக்குகள்  நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கில் தொடர்புடைய  கோயில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்துசமய அறநிலையத்துறை கோயில் நிலங்களில் குத்தகைக்கு இருப்பவர்கள், அறநிலையத்துறை நிர்ணயித்த வாடகையை செலுத்த வேண்டும். 

மேலும் கோவில்களின் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள  கோவில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுதொடர்பான அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளை  நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com