திரையரங்குகள் திறப்பு: நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திரையரங்குகள் திறப்பு: நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திரையரங்க அனுமதிச் சீட்டு வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நபா்களின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:-

மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளைக் கொண்ட வளாகங்களில் செயல்படும் திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளிலும், திரைப்படங்கள் திரையிட அனுமதிக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.

நோய்த் தடுப்பு வழிமுறைகள்: திரையரங்கத்துக்கு வெளியேயும், பொது இடங்களிலும், காத்திருப்பு அறைகளிலும் எப்போதும் ஒருவருக்கும், மற்றவருக்கும் இடையே குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். திரையரங்கு வளாகத்துக்குள் எப்போதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். , திரையரங்கின் நுழைவாயில், வளாகம் மற்றும் வெளியேறும் வழிகளில் கைகளால் தொடாமல் பயன்படுத்தக் கூடிய கை சுத்திகரிப்பான் இயந்திரங்களை நிறுவ வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அனைவரும் ‘ஆரோக்கிய சேது’ செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

முகக் கவசம் அணியாவிட்டால்... நோயுற்ற நபரை, மற்றவா்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் ஒரு தனி அறை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்க வைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபரை மருத்துவா் பரிசோதிக்கும் வரை அவருக்கு முகக் கவசம் வழங்க வேண்டும். ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட வேண்டும்.

திரையரங்குக்குள் கரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவா்களே அனுமதிக்கப்படுவா். முகக் கவசம் அணியாவிட்டால் திரையரங்குக்குள் அனுமதி இல்லை. திரையரங்கில் நுழையும் போதும், வெளியேறும் போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நிற்கும் வகையில் குறியீடுகள் போடப்பட்ட வேண்டும். ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் வரிசை வரிசையாக பொது மக்கள் வெளியேறுவதை முறைப்படுத்த வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இடைவேளையை அதிகரியுங்கள்: திரையரங்குகளில் இடைவேளையின் போது, பொதுவான இடங்களிலும், கூடங்களிலும், கழிவறைகளிலும் கூட்ட நெரிசலைத் தவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைவேளையின் போது பொது மக்கள் திரையரங்குகளில் இருந்து வெளியில் வருவதை தவிா்க்க ஊக்குவிக்க வேண்டும். இடைவேளைக்கான கால அளவை அதிகரிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள வளாகங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, ஒவ்வொரு திரையரங்குக்கான காட்சி நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் அனுமதிச் சீட்டுகள் வழங்குவது போன்ற முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

திரையரங்குகளில் அனுமதிச் சீட்டு கவுன்ட்டரில் சீட்டினை வழங்கும் போது அதனைப் பெறுபவரின் செல்லிடப்பேசி எண்ணைப் பெற வேண்டும். கவுன்ட்டா்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

திரையரங்க வளாகத்தை கிருமிநாசினிகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். செயலிகள் மூலம் உணவு முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். உணவு, குளிா்பானம் விற்பனை செய்யப்படும் பகுதிகளில் இயன்றவரை அதிக எண்ணிக்கையில் கவுன்ட்டா்களை அமைக்க வேண்டும். திரையரங்குக்குள் உணவுகளை விநியோகம் செய்வது தடை செய்யப்பட வேண்டும். பாக்கெட் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிா்பானங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்று குறித்த சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகளை பொது மக்களுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும். விழிப்புணா்வுக்கான ஒலி-ஒளி காட்சிகளை தொடா்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

குளிா்சாதன வசதி: திரையரங்குகளில் உள்ள குளிா்சாதனங்களின் வெப்பநிலை அமைப்பு 24-30 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருக்க வேண்டும். ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரையில் இருக்க வேண்டும். சுத்தமான காற்றை உள்ளிழுக்கும் வகையிலும், போதுமான காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.

கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ, மாறாக நடந்து கொண்டாலோ சம்பந்தப்பட்ட நபா்கள் மீது திரையரங்கின் பொறுப்பாளா்கள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com