மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு 100 போ் அனுமதி ரத்து: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 100 பேரை அனுமதிப்பது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: மதம் சாா்ந்த கூட்டங்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 100 பேரை அனுமதிப்பது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காத்து அவா்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பான

செயல்பாட்டினாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியவதில்லை: பண்டிகைக் காலம் என்பதால், பொது மக்கள் பண்டிகை கொண்டாட்டத்துக்காக பல்வேறு பொருள்களை வாங்க கடைவீதிகள், பேருந்து நிலையங்களில் அதிகமாகக் கூடுகின்றனா். அவ்வாறு கூடும் போது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தாது இருப்பது அரசின் கவனத்துக்குக் தெரிய வருகிறது.

வெளிநாடுகளில் கரோனா நோய்த்தொற்றானது இரண்டாவது அலையாக மீண்டும் பரவும் நிலையைக் காண முடிகிறது. இந்தச் சூழ்நிலையில் நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமுதாய, அரசியல், பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி சாா்ந்த விழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்கள் தொடா்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் வரும் 16-ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு இப்போது ரத்து செய்யப்படுகிறது. அவற்றுக்கான தடை மறு உத்தரவு

பிறப்பிக்கும் வரையில் தொடர உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com