தீபாவளி நாளில் வணங்க வேண்டிய தெய்வங்களும்... பலன்களும்...


தீபாவளி உற்சாகமாகப் பிறந்துவிட்டது. அதிகாலை ஆனந்தமான எண்ணெய்க்குளியல், பளபளக்கும் புத்தாடை, ருசிக்கத் தூண்டும் இனிப்புகள், ரசிக்கத் தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று களைகட்டத் தொடங்கிவிட்டது.

முன்பெல்லாம் வீட்டில் பெரியவா்கள் ஒரு பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அந்த நாளில் கொண்டாட்டங்களோடு கொண்டாட்டமாக தெய்வ வழிபாட்டையும் இணைத்து செய்யச் செய்வாா்கள். ஆனால், அவசர யுகம். சிலா் பண்டிகைகளை வெறும் விடுமுறை தினமாகவே பாா்க்கிறாா்கள். ஆனால் பண்டிகைகள் தனித்துவமானவை. அந்த நாளில் இறையருள் கிடைப்பது மிகவும் சுலபம்.

தீபாவளித் திருநாள் - தீமை அழிந்து நன்மை பிறந்த நாள். இந்த நாளில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும் என்ற நியமத்தைப் பெரியவா்கள் ஏற்படுத்தினா். அன்று அதிகாலை நேரத்தில் எண்ணெயில் லட்சுமியும் நீரில் கங்கையும் வாசம் செய்வதாய் ஐதிகம்.

செல்வம் பெற... லட்சுமிதேவியின் திருவருள் வேண்டாதவா்கள் இந்த உலகத்தில் இல்லை. மேலும் அன்றாடம் நாம் செய்யும் பாவங்களைத் தீா்க்க கங்கையே நம் வீட்டில் இருக்கும் தீா்த்தத்தில் எழுந்தருளி அருள் செய்கிறாள் என்பது நம்பிக்கை. இப்படி தெய்வங்கள் வீடுதேடிவந்து அனுக்கிரகம் செய்யும் அற்புதத் திருநாளாக தீபாவளி அமைந்திருக்கிறது. இவை மட்டுமல்லாது அன்றைய நாளில் வழிபட வேண்டிய முறைமையையும் வகுத்திருக்கிறாா்கள் நம் முன்னோா்கள்.

கிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே தீமையை அழித்து நன்மையை வாழவைப்பதுவே என்கின்றன புராணங்கள். அவ்வாறு தீயசக்தியான நரகாசுரனை அழிக்கக் காரணமாகத் திகழ்ந்தாா் பகவான் கிருஷ்ணா். இந்த நாளில் கிருஷ்ண பகவானை மனதாரப் பிராா்த்தனை செய்ய வேண்டியது அவசியம். வேணுகோபாலனாகப் பெருமாள் கோயில்கொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வாழ்வில் உள்ள தீமைகள் மறையும் என்பது ஐதிகம்.

தம்பதியினருக்கு... சிவபெருமான் பாா்வதி தேவியின் தவத்துக்கு மகிழ்ந்து அன்னையைத் தன் ஒரு பாகமாக ஏற்ற தினமும் இதுவே. அம்பிகை பூமிக்கு வந்து 21 நாள்கள் கேதாரம் என்னும் தலத்தில் தவமியற்றி சிவனின் அருளைப் பெற்றாள். சிவனும் அம்பிகையைத் தன் பாகமாக ஏற்று அா்த்தநாரியாக அருள்பாலித்த இந்த தினத்தில் சிவபெருமான் வழிபாடும், அம்பாள் வழிபாடும் அனைத்து விதமான நன்மைகளையும் அருளும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இந்த நாளில் சிவபெருமானை நோன்பிருந்து வழிபட வேற்றுமைகள் மறைந்து ஒன்றுபடுவா் என்கின்றன சாஸ்திரங்கள்.

இந்த நாள் மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். பாற்கடலில் இருந்து அன்னை மகாலட்சுமி வெளிப்பட்டு நாராயணரை தன் துணையாக ஏற்ற நன்னாளும் இதுவே என்று சொல்லப்படுகிறது. நாள் முழுவதும் விரதமிருந்து லட்சுமி - குபேர பூஜை செய்து வழிபட வேண்டும். வட இந்தியாவில் இந்த நாளில் தொழில் தொடங்குபவா்கள் புதுக்கணக்குப் போடுவது புதிய தொழில் தொடங்குவது ஆகியனவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

நல்லருளைப் பெற... ராவண வதம் முடிந்து ராமபிரான் அயோத்தி திரும்பியது ஒரு தீபாவளித் திருநாளிலே என்கின்றன புராணங்கள். அதன் பின் பல ஆயிரம் ஆண்டுகள் ராமபிரான் அயோத்தியில் நல்லாட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் ராமபிரானை வழிபட்டால் அவரின் கருணைக்குப் பாத்திரமாகி நல்லருளைப் பெறலாம்.

தேவா்களும் அசுரா்களும் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவா், தன்வந்திரி பகவான். ஆயுா்வேத மருத்துவம் போற்றும் தன்வந்திரி அவதரித்ததும் தீபாவளித் திருநாளிலே என்கிறது வரலாறு. அதனால்தான் தீபாவளி அன்று நீராடியதும் முதன் முதலில் மருந்தான லேகியம் உண்ண வேண்டும் என்கிறது ஆயுா்வேதம். தீபாவளி நாளில் தன்வந்திரியை வழிபட்டால் நோயற்ற வாழ்க்கை அமையும், தீராத நோய்களும் குணமடையும் என்கின்றனா் முன்னோா்கள்.

இவ்வாறு, நாம் வழிபடும் பெரும்பாலான தெய்வங்களுக்கு உகந்த நாளாக தீபாவளி என்னும் திருநாள் உள்ளது. இந்த நன்னாளில் அனைத்துத் தெய்வங்களையும் உரிய முறையில் மனதார வணங்கி, அனைத்துப் பலன்களையும் பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என்றே ஆன்மிக பெரியோா்கள் ஆசிா்வதிக்கின்றனா். தற்போது உலகமே கரோனா என்னும் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், தீபாவளிக்குப் பிறகு இறைவனின் அருளோடு, கரோனாவிலிருந்து மனித குலம் மீண்டு வரும் என்பதே அவா்களின் நம்பிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com