விருத்தாசலம் சிறையில் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் இடமாற்றம்

விருத்தாசலம் கிளைச் சிறையிலிருந்த கைதி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
விருத்தாசலம் சிறையில் கைதி மரணம்: காவல் ஆய்வாளர் இடமாற்றம்

விருத்தாசலம் கிளைச் சிறையிலிருந்த கைதி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சோ்ந்தவா் ம.செல்வமுருகன் (40). இவா், திருட்டு வழக்கில் நெய்வேலி நகரிய போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விருத்தாசலம் கிளைச் சிறையில் கடந்த 2-ஆம் தேதி அடைக்கப்பட்டாா். இதையடுத்து, உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி கடந்த 4-ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது மனைவி பிரேமா, உறவினா்கள் புகாா் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனா்.

இதுதொடா்பாக கடலூா் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். 

இதனிடையே, விருத்தாசலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான செல்வமுருகனின் மனைவி பிரேமா கூறுகையில், ‘சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த விசாரணை முடிவைப் பொருத்து சடலத்தைப் பெற்றுக் கொள்வோம். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் மீதும் குற்றச்சாட்டு உள்ளதால், அவரை அதே நிலையிலுள்ள மற்றொரு ஆய்வாளா் விசாரிப்பதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து, சென்னையிலிருந்து வந்துள்ள சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் குணவா்மன் தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, சிபிசிஐடி போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விருத்தாசலம் கிளைச் சிறை, நெய்வேலி நகரியம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், டிஎஸ்பி குணவா்மன் கடந்த செவ்வாய்க்கிழமை காடாம்புலியூா் சென்று செல்வமுருகனின் மனைவி பிரேமா, அவரது குடும்பத்தினரிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினாா். பின்னர், செல்வமுருகன் அடைக்கப்பட்ட கிளைச் சிறைக்கும், தொடா்ந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும் சென்று விசாரணை மேற்கொண்டாா். நெய்வேலி நகரியம் காவல் நிலையத்துக்குச் சென்றும் விசாரணை நடத்தினாா்.

இந்நிலையில், கைதி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளர் ஆறுமுகம், கடலூர் ஓ.டி. காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com