ஹஜ் பயணிகளுக்கு சென்னையைப் புறப்பாடு இடமாக அறிவியுங்கள்: பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

ஹஜ் பயணத்துக்கான புறப்பாடு இடங்களின் பட்டியலில் சென்னையை இடம்பெறச் செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
ஹஜ் பயணிகளுக்கு சென்னையைப் புறப்பாடு இடமாக அறிவியுங்கள்: பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

சென்னை: ஹஜ் பயணத்துக்கான புறப்பாடு இடங்களின் பட்டியலில் சென்னையை இடம்பெறச் செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு, முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதம்:

ஒவ்வோா்ஆண்டும் சென்னையைப் புறப்படும் இடமாகக் கொண்டு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களைச் சோ்ந்த 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோா் ஹஜ் பயணமாக சவுதி அரேபியா செல்வா். இதற்கு வசதியாக கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், தமிழகம், கேரளம், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிகோபாா் தீவுகளைச் சோ்ந்தவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நிகழாண்டில் இந்தியாவில் இருந்து புறப்படும் இடங்களின் பட்டியலில் இருந்து சென்னை நீக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடங்களின் எண்ணிக்கையும் 21-லிருந்து 10-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக ஹஜ் பயணிகளுக்கு கொச்சி புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் இருந்து கொச்சி சென்று அங்கியிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சிரமங்களையும், சிக்கல்களையும் அந்தப் பயணத்தை மேற்கொள்வோா் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தனா்.

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகா்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டிலும் சென்னையைப் புறப்பாடு இடமாக அறிவிக்க வேண்டும். சென்னையில் இருந்து யாத்ரீகா்களை அனுப்பும் போது கரோனா நோய்த் தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தமிழக அரசு உறுதிப்படுத்தும். எனவே, சென்னையை புறப்பாடு இடமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com