சிதிலமடையும் 17-ம் நுாற்றாண்டுப் புலிக்குத்தி கல்வெட்டு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்தி கல்வெட்டு போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. 
வெள்ளாளகுண்டம் கிராமத்திலுள்ள 17-ம் நுாற்றாண்டு புலிக்குத்தி கல்வெட்டு.
வெள்ளாளகுண்டம் கிராமத்திலுள்ள 17-ம் நுாற்றாண்டு புலிக்குத்தி கல்வெட்டு.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில், 17 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்தி கல்வெட்டு போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. இந்த கல்வெட்டை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைந்து 17 மற்றும் 18 ம் நுாற்றாண்டுகளில் சின்னமநாயக்கர் வம்சாவழி குறுநில மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இப்பகுதியில்  ஏரிகள், குளங்களை அமைத்து சிறப்பான நீர் மேலாண்மை கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இன்றளவிலும், பல்வேறு ஏரிகள் இந்த குறுநில மன்னர்களின் வாரிசுகளின் பெயர்களிலேயே அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களது ஆட்சிகாலத்தில் திறமையான வீரர்களின் நினைவாக நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் 17 அல்லது 18 ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட புலிக்குத்தி வீரக்கல் கல்வெட்டு ஒன்று, வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உள்ளது.

கிராமத்தின் மையத்திலுள்ள அரசமரத்தடி விநாயகர் கோவிலில் தெற்குபுறம் காணப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வீரக்கல்லில், வீரன் ஒருவர், எதிரியின் குதிரையைக் கழுத்தில் குத்தி வீழ்த்துவதைப்போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதே கல்வெட்டின் கீழ்ப் பகுதியில் புலியைக்குத்தி வீழ்த்துவதைப் போலவும், அருகில் ஒரு பெண் கரம் கூப்பி வணங்குவதைப்போலவும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

வீரக்கல்லின் மேல்பகுதியில் சிதைந்த நிலையில் 5 வரிகளில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி இரு வரிகளில் ‘சிவன் மூப்பன்  புலியும் குதிரையும் குத்தினது என்று எழுதப்பட்டுள்ளதாக, 2005ம் ஆண்டு ஜூலை மாதம், தஞ்சாவூர் தமிழகத் தொல்லியல் கழகம் வெளியிட்ட ஆவணம் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலிக்குத்தி வீரக்கல்லோடு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்வெட்டு, பல ஆண்டுகளாக மழை, வெய்யில் பட்டு சிதிலமடைந்து வருகிறது. எனவே, இந்த கல்வெட்டை அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று பராமரித்துப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது, 

புலிக்குத்தி நடுகற்கள் குறைந்த அளவிலேயே காணக் கிடைக்கின்றன. வெள்ளாளகுண்டத்தில் காணப்படும் புலிக்குத்தி நடுகல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது வரலாற்று சிறப்பு மிகுந்ததாகும். இந்த கல்வெட்டை சிதிலமடையாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று பராமரித்துப் பாதுகாக்கவும், தற்கால சந்ததியர், மாணவ-மாணவியர், வரலாற்று ஆர்வலர்கள் பார்வையிடுவதற்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com