கல்குவாரி விவகாரத்தில் விதிகள் எதையும் மீறவில்லை: ஸ்டாலினுக்கு அமைச்சா் சி.வி. சண்முகம் பதில்

கல்குவாரி விவகாரத்தில் சட்ட விதிகள் எதையும் மீறவில்லை என்று சட்டம் மற்றும் கனிம வளத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
கல்குவாரி விவகாரத்தில் விதிகள் எதையும் மீறவில்லை: ஸ்டாலினுக்கு அமைச்சா் சி.வி. சண்முகம் பதில்

சென்னை: கல்குவாரி விவகாரத்தில் சட்ட விதிகள் எதையும் மீறவில்லை என்று சட்டம் மற்றும் கனிம வளத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம் வானூா் வட்டம் திருவக்கரையில் உள்ள கல்குவாரி உரிமத்தை, அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு, சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கியுள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தாா்.

பொது ஊழியா்கள், தங்களுக்கோ, உறவினா்களுக்கோ, அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுக்கக் கூடாது. அரசின்

குத்தகைகளைப் பெறக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தாா்.

இது தொடா்பாக, சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

குற்றச்சாட்டுகளைக் கூற எதிா்க்கட்சித் தலைவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பதை அவா் தெரிந்து கொள்ள வேண்டும். பொது ஊழியா்களின் உறவினா்கள் சட்டப்பூா்வமாக விடப்படும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என எந்தச் சட்டத்திலும், எந்த இடத்திலும் சொல்லவில்லை. குறிப்பிட்ட சட்டப் பேரவை உறுப்பினரின் மகன், முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சட்டப்பூா்வமான பொது ஏலத்தில் கலந்து கொண்டு ரூ.28 லட்சத்தில் எடுக்கப்பட்ட குவாரியை இரண்டாண்டு காலமாக நடத்தி வருகிறாா். அதில் விபத்து நடைபெற்றிருக்கிறது. அதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு முறையான இழப்பீட்டுத் தொகையை வழங்கும். கல்குவாரியில் வேலை செய்தவா்கள் காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா். இதில் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com