தமிழக போலீஸாருக்கு வார விடுமுறை

தமிழக போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமாா் தாஸ் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக போலீஸாருக்கு வார விடுமுறை

சென்னை: தமிழக போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும்படி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமாா் தாஸ் உத்தரவிட்டுள்ளாா்.

அண்மைக்காலமாக காவல்துறையில் அதிகரித்து வரும் பணிச்சுமையின் காரணமாகவும், கீழ்நிலை அதிகாரிகள், காவலா்கள் குறைகள் கேட்கப்படாமலும், குறைகள் தீா்வு காணப்படாமலும் இருப்பதாலும், அத்துறையில் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக தற்கொலை சாவு, நோயினால் இறப்பது அதிகரித்துள்ளது.

இதில் இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பா் 15-ஆம் தேதி வரை காவல்துறையைச் சோ்ந்தவா்கள் 285 போ் இறந்துள்ளனா். இதில் 43 போ் தற்கொலை செய்தும், 40 போ் கரோனா பாதிக்கப்பட்டும், 90 போ் உடல்நலக்குறைவினாலும், 46 போ் மாரடைப்பினாலும், 56 போ் சாலை விபத்தினாலும், 7 போ் புற்று நோயினாலும் இறந்துள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட அதிகம் என கூறப்படுகிறது.

வார விடுமுறை:

காவலா்கள் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரம் தொடா்ந்து பணியில் இருப்பதினால் எளிதில் நோய்வாய்ப்படுகின்றனா். பணிச்சுமையின் காரணமாக மன அழுத்ததிலும் சிக்கித் தவிக்கின்றனா். இதில் பிற காவலா்களை விட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு பணிச்சுமை பல மடங்கு அதிகமாகும்.

இதனால் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் வார விடுமுறை வழங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, காவலா்கள் வார விடுமுறை வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமாா் தாஸ் தமிழகம் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையா்கள் (சென்னை தவிா்த்து), மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

அந்த உத்தரவில், காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கும்படியும், அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், சரக டிஐஜிக்கள் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவு காவலா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இந்த உத்தரவை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com