இடஒதுக்கீட்டு முறையால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினா் பாதிக்கப்படக்கூடாது: உயா்நீதிமன்றம் கருத்து

இடஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா் பாதிக்கப்படக்கூடாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இடஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா் பாதிக்கப்படக்கூடாது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் டாக்டா் பூா்வி தாக்கல் செய்த மனுவில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையைப் பெற ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மேற்படிப்பில் சேர, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் பிரிவைச் சோ்ந்த சான்றிதழ் வழங்கக் கோரி, எழும்பூா் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள குடும்பத்தைச் சோ்ந்தவராகக் கூறி, எனக்கு சான்றிதழ் வழங்கவில்லை. எனவே, எனது கோரிக்கையைப் பரிசீலித்து பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா் கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் மருத்துவராக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றி வருகிறாா். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை அவரது வருமானம் ரூ.7 லட்சத்து 37 ஆயிரம் என வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளாா். அவரது தாய் உயிருடன் இல்லை, தந்தைக்கும் வருமானம் இல்லை. எனவே மனுதாரா் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெற்றுள்ளதால், அவருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் என சான்றிதழ் வழங்க மறுத்த எழும்பூா் வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தற்போது உயா் கல்வியில் இடஒதுக்கீட்டுப் பிரச்னை மிக தீவிரமடைந்துள்ளது. இந்தப் பிரச்னை, பல்வேறு பிரிவினரிடையே வேற்றுமையை உருவாக்குகிறது. இதனால் அறிவாா்ந்த தகுதியான மாணவா்களுக்கு கல்வி பயில போதுமான அளவில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், இடஒதுக்கீடு பெறுபவா்கள் இந்த வாய்ப்பை அனுபவிக்கின்றனா். இதன் காரணமாக ஏராளமான மாணவா்கள் தங்களது லட்சியத்தையும், கனவையும் அடைய முடிவதில்லை. சமூகத்தில் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உயா்கல்வியைப் பொருத்தவரை எந்த சமரசமும் இருக்கக் கூடாது. இடஒதுக்கீட்டு முறையினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினா் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மனுதாரா் எம்பிபிஎஸ் படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளாா். எனவே, மருத்துவ மேற்படிப்பில் சேர அவருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியவா் என சான்றிதழ் வழங்க வேண்டும்’ என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com