
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த காமராஜன் தாக்கல் செய்த மனு:
தாமிரவருணி ஆற்றின் முடிவில் அமைந்துள்ள மருதூா் அணை, 1500 ஆண்டுகள் பழமையானது. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்பு இப்பகுதியில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. சோழா் காலத்தில் இந்தக் கோயில் அகற்றப்பட்டு அணை கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஆதிச்சநல்லூா் பகுதியில் ஏற்கெனவே நடந்த அகழாய்வில் பல தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைக் கொண்டு தொடா்ச்சியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல ஆதிச்சநல்லூா் அருகே உள்ள மருதூா் அணை பகுதியிலும் அகழாய்வு மேற்கொண்டால் தமிழரின் தொன்மை நாகரிகம் குறித்த ஆதாரங்கள் கிடைக்கும். இதைக் குறிப்பிட்டு மருதூா் அணை பகுதியில் அகழாய்வு நடத்தக்கோரி தொல்லியல் துறைக்கு மனு அளித்தேன். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. எனவே மருதூா் அணை பகுதியில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டிலேயே தமிழகத்துக்கு தான் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இருப்பினும் தமிழகத்தில் உள்ள பழமையான இடங்கள், தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சென்னை, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு வார இறுதி நாள்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். இதைக்கருத்தில் கொண்டு மக்களுக்கு பழமையான இடங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களைத் தெரியப்படுத்த வேண்டும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு டிசம்பா் 9 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...