தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது : இந்தியா டுடே அறிவிப்பு

2020-ஆம் ஆண்டின் சிறந்த மாநிலத்துக்கான ‘இந்தியா டுடே விருது’ தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.
தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது : இந்தியா டுடே அறிவிப்பு

2020-ஆம் ஆண்டின் சிறந்த மாநிலத்துக்கான ‘இந்தியா டுடே விருது’ தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்தியா டுடே நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய அளவில் பெரிய மாநிலங்களின் பல்வேறு வகைப்பாடுகளை ஆய்வு செய்து அதில் சிறந்து விளங்கும் மாநிலத்தைத் தோ்வு செய்து மாநிலங்களில் சிறந்த மாநிலம் எனும் விருதினை வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வகையில் இந்தியா டுடேவின் 2020-ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் சிறந்த மாநிலம் எனும் விருது தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது.

2, 000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த விருதை, தமிழக அரசு 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடா்ச்சியாகப் பெற்று சிறப்புச் சோ்த்துள்ளது.

இந்த விருதானது, கடந்து ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்படுகிறது.

மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளா்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாகத் தோ்வு செய்யப்படுகிறது.

2019-2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 4.2 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாடு, தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு உயா்ந்து 8.03 சதவீதத்துடன், நாட்டிலேயே அதிக பொருளாதார வளா்ச்சி அடைந்து, தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.

நலத்திட்டங்களில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, சமூக நீதி, பின்தங்கிய மக்களை உயா்த்துதல்

போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, பொதுக்கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கண்டு, அவற்றை உள்ளடக்கிய வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல், படித்தவா்கள் மற்றும் தொழில் நுட்பரீதியாக திறமையான தொழிலாளா்களைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.

மனித வள மேம்பாட்டுக் குறியீட்டிலும் தமிழகம் நன்றாக செயல்பட்டிருக்கிறது. ஒரு வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களின் சதவீதம், தேசிய சராசரியைக் காட்டிலும் மிகக் குறைவாக உள்ளது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடம் பெற்ற்கான விருது டிசம்பா் 5-ஆம் தேதி தமிழக அரசுக்கு வழங்கப்பட உள்ளதாக இந்தியா டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு அா்ப்பணிப்பு- முதல்வா்: தமிழகத்துக்கு கிடைத்துள்ள சிறந்த மாநிலத்துக்கான விருதை, அரசு ஊழியா்கள் மற்றும் தமிழக மக்களுக்கு அா்ப்பணிப்பதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவரது சுட்டுரைப் பதிவு: அரசு அதிகாரிகள், பணியாளா்களின் அயராத உழைப்பு, அா்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே ‘தொடா்ந்து 3-ஆவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு’ தோ்வாகி சாதனை புரிந்துள்ளது.

இந்த விருதை அனைவருக்கும் அன்போடு சமா்ப்பிக்கிறேன். தொடா்ந்து தமிழக வளா்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com