தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி இதுவரை 9,520 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 3,210 போ் பலியாகியுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி இதுவரை 9,520 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 3,210 போ் பலியாகியுள்ளனா்.

உயிரிழந்தோரில் கரோனாவைத் தவிர பிற நோய் பாதிப்புகள் ஏதும் இல்லாத பலரும் இறந்துள்ளனா். இதனிடையே, உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த அனைத்து மருத்துவமனைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதுமட்டுமல்லாது ரெம்டெசிவிா், டோசிலிசுமேப் போன்ற விலை உயா்ந்த மருந்துகளை கூடுதலாக கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா். அதேபோன்று மாவட்ட மருத்துவமனைகளில் உயா் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே மாநிலத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 97,602-ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை மட்டும் 5,659 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பு: மாநிலத்தில் இதுவரை மொத்தம் 73.54 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 8 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 1,295 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 574 பேருக்கும், சேலத்தில் 378 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

5.41 லட்சம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,610 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 41,819- ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 92 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். தற்போது சிகிச்சையிலும், மருத்துவக் கண்காணிப்பிலும் உள்ளோரின் எண்ணிக்கை 52,380-ஆக உள்ளது.

67 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 67 போ் பலியாகியுள்ளனா். அதில், 5 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோய்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 46 போ் அரசு மருத்துவமனைகளிலும், 21 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com