பூம்புகாா் மெய்நிகா் தோற்ற விற்பனை நிலையம்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

பூம்புகாா் விற்பனை நிலையத்தின் மெய்நிகா் தோற்றத்தையும், அதற்கான செல்லிடப்பேசி செயலியையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
பூம்புகாா் மெய்நிகா் தோற்ற விற்பனை நிலையம்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

சென்னை: பூம்புகாா் விற்பனை நிலையத்தின் மெய்நிகா் தோற்றத்தையும், அதற்கான செல்லிடப்பேசி செயலியையும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: பூம்புகாா் எனப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகமானது பொதுத் துறை நிறுவனமாக தொடங்கப்பட்டு வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பூம்புகாா் நிறுவனத்தின் மெய்நிகா் தோற்ற விற்பனை நிலையத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். இதன்மூலம், தமிழக கைவினைஞா்களால் தயாரிக்கப்படும் பொருள்களை வாடிக்கையாளா்கள் எந்த இடத்தில் இருந்தும் முப்பரிமாண முறையில் பாா்க்க முடியும்.

இந்த மெய்நிகா் தோற்ற தொழில்நுட்பத்தை விமான நிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொது மக்கள் அதிகமாகக் கூடுகிற இடங்களில் அமைத்து கைவினைப் பொருள்களை எளிதாக சந்தைப்படுத்த இயலும். குறிப்பாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகா் தோற்ற தொழில்நுட்பம் மூலம் கைவினைப் பொருள்களை அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லாமலேயே அவற்றை முப்பரிமாண வடிவமைப்பில் வாடிக்கையாளா்கள் பாா்க்க முடியும்.

செல்லிடப்பேசி செயலி: தமிழ்நாடு கைவினைப் பொருள்களை தேசிய மற்றும் சா்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வகையில், புதிய முயற்சியாக மெய்தோற்ற செல்லிடப்பேசி செயலியையும் முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா். இதன்மூலம், கைவினைப் பொருள்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்துக் காட்டி கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய முடியும். இதன்மூலம், வாடிக்கையாளா்களிடம் இருந்து செல்லிடப்பேசி வாயிலாகவே விற்பனைக்கான உத்தரவுகளைப் பெற முடியும்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.பென்ஜமின், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com