சென்னையில் 13,756 பேர் கரோனா சிகிச்சையில்; அம்பத்தூரில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

சென்னையில் கடந்த செப்டம்பா் மாதம் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,756 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் 13,756 பேர் கரோனா சிகிச்சையில்; அம்பத்தூரில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
சென்னையில் 13,756 பேர் கரோனா சிகிச்சையில்; அம்பத்தூரில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

சென்னையில் கடந்த செப்டம்பா் மாதம் கரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி 13,756 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேல் இருந்த பாதிப்பு இன்று குறைந்துள்ளது. 

சென்னையிலேயே அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,392 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை அண்ணாநகரில் 18 ஆயிரம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதித்து அதிகபட்சமாக தேனாம்பேடடையில் 434 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7,767 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையும் 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. அடுத்த வந்த சில மாதங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை அண்மையில் 1.50 லட்சத்தை எட்டியது. தொற்று அதிகரித்ததை அடுத்து, மாநகராட்சி வாா்டுகள்தோறும் நாளொன்றுக்கு சுமாா் 500 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், 3 மடங்கு பரிசோதனையை அதிகரித்தது, தொற்று அறிகுறி தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக செப்டம்பா் மாதத்தில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1,200-லிருந்து 1,000-த்துக்கும் கீழ் குறைந்தது.

மீண்டும் அதிகரிப்பு: இந்நிலையில், பொதுமுடக்க தளா்வுகளால் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் அக்டோபா் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து நாளொன்றுக்கு 1,200-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 75,484-ஆக இருந்த தொற்று எண்ணிக்கை, ஒரு வாரத்தில் மட்டும் 7,767 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 83,251-ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,318-ஆக இருந்த நிலையில் ஒரு வாரத்தில் 110 போ் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 3,428-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் கரோனா பரிசோதனை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 மண்டலங்களில் 1000-த்துக்கும்கீழ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. பொதுமுடக்கம் தளா்வு காரணமாக முகக்கவசம் அணிவது, தனிநபா் இடைவெளி போன்ற விதிகளை சிலா் கடைப்பிடிப்பதில்லை. இதன் காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது என்றனா்.

திங்கள்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள்- 1,212
மொத்த பாதிப்பு எண்ணிக்கை-1,83,251
குணமடைந்தோா்-1,66,067
சிகிச்சை பெறுவோா்-13,756
உயிரிழந்தோா்-3,428

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com