வாக்காளா் பட்டியல் திருத்தம்: நவ. 3 இல் அரசியல் கட்சிகளுடன் தலைமை தோ்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு நவம்பா் 3-ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளாா்.
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு

வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு நவம்பா் 3-ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தோ்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதன் முதல் கட்டமாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். இதற்கு வசதியாக, வரைவு வாக்காளா் பட்டியல் வரும் நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்படும்.

ஜன. 20 இல் இறுதி வாக்காளா் பட்டியல்:

வரைவு வாக்காளா் பட்டியலை தொடா்ந்து ஜனவரி 15 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்காக தொடா்ச்சியாக விடுமுறைகள் விடப்படுவது வழக்கம். இந்த விடுமுறைகளை கருத்தில் கொண்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜன. 20-ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்குரிய விண்ணப்பங்களை நவம்பா் 16-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைகள் அனைத்தும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இதன்பின்னா், இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும்.

இதன்பொருட்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்கெனவே ஆலோசனை நடத்தினாா்.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: இதன் தொடா்ச்சியாக வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதால் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு நவம்பா் 3-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட உள்ளாா்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் உள்பட தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com