திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீக்குளிக்க முயன்ற பாரத்
தீக்குளிக்க முயன்ற பாரத்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் பாரத்(26). இவர் திருவள்ளூர் அருகே செங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த வேலை செய்து வருகிறார். இவரை அந்த நிறுவனத்தில் ஒப்பந்தகாரராக உள்ள வலசைவெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் இழிவாக பேசுவதாகவும், தகாத முறையில் நடந்து கொள்ள வலியுறுத்துவதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் செல்வம் மீது புகார் செய்துள்ளார். ஆனால், மணவாளநகர் காவல் நிலைய காவலர்கள் செல்வம் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாரத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாலையில் வந்துள்ளார். அப்போது, அலுவலகம் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனக்கு தானே உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து இளைஞர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

அதைத் தொடர்ந்து விரைந்து வந்த திருவள்ளூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com