கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கு: சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு

கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பதிலளிக்க (சிஎம்டிஏ) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கு சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு
கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கு சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு


சென்னை: கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பதிலளிக்க (சிஎம்டிஏ) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. இங்கிருந்த கடைகள் திருமழிசை, மாதவரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில், வணிகர் சங்கங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதல் கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதியும் திறப்பது எனவும் பின்னர் மற்ற கடைகளைத் திறப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அண்ணா கனி மொத்த வியாபாரிகள் கடைகளைத் திறக்க உத்தரவிட கோரி, சென்னை கோயம்பேடு வணிக வளாகம் 4 ஆவது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை. 700 பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், 200 வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பில், கோயம்பேடு கனிகள் மொத்த அங்காடியை திறக்க கோரி அளித்த மனுவை, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் பரிசீலித்த அரசு, படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என பதிலளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 

மேலும் ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் கோயம்பேடு அங்காடி பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்ட பின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என   தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக புகைப்பட மற்றும் விடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், இந்த மனுவுக்கு வரும் டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சந்தை நிர்வாக குழுவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com