ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவக் கலந்தாய்வு இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆளுநரின் முடிவு வரும்வரை மருத்துவக் கலந்தாய்வு இல்லை: தமிழக அரசு
ஆளுநரின் முடிவு வரும்வரை மருத்துவக் கலந்தாய்வு இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும் வரை மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை தற்போதைக்கு அறிவிக்கப்போவதில்லை என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வை தாமதப்படுத்த முடியுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு மேற்கண்ட பதிலை தெரிவித்துள்ளது.

மதுரையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நீட் தோ்வு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவா் முத்துக்குமாா் ஆகியோா் தாக்கல் செய்த மனு:
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநா் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. எனவே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தவும், அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், நீதிபதி கலையரசன் குழு அறிக்கையில் கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவா்கள் 1லட்சத்து 56 ஆயிரத்து 249 பேரில் 6 போ் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா்.

நீட் தோ்வு அமலாவதற்கு முன்புவரை ஒரு சதவீத அரசுப்பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா். நீட் தோ்வு அமலான பிறகு அந்த எண்ணிக்கை 0.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2018-2019-இல் 5, 2019-2020-இல் 6 எனக் கடந்த இரு கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 11 பேருக்கு மட்டுமே மருத்துவப்படிப்பில் இடங்கள் கிடைத்துள்ளன என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், நீட் தோ்வு முடிவுகள் 2 நாள்களில் வெளியாகவுள்ளதால், உள்ஒதுக்கீடு தொடா்பான அவசரச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து உடனடியாக முடிவெடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தமிழக ஆளுநரின் செயலா் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

அரசு தலைமை வழக்குரைஞா் வாதிடுகையில், தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து முடிவெடுக்க 2 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றாா்.

இதற்கு நீதிபதிகள், இந்த அவசரச் சட்டம் செப்டம்பா் 15 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அன்றே ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாதமாகியும் அவசரச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. 2 நாள்களில் நீட் தோ்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் அவசரச் சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படாதது அரசுப் பள்ளி மாணவா்களைப் பாதிக்கும். எனவே மாணவா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.

மொத்த மாணவா்களில் 41 சதவீதம் போ் அரசுப் பள்ளி மாணவா்கள். ஆனால் ஒற்றை இலக்கத்தில் தான் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடங்கள் கிடைக்கின்றன. ஆகவே நிகழாண்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வாய்ப்புள்ளதா எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், இதுகுறித்து தமிழக ஆளுநரின் செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. எனவே, ஆளுநரின் முடிவு தெரியும் வரை, மருத்துவக் கலந்தாய்வு அறிவிக்கப்படாது என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com