முதுநிலை மருத்துவப் படிப்பு: அரசு மருத்துவா்களுக்கு 50% இடங்களை ஒதுக்குவதில் உடன்பாடு இல்லை

சிறப்பு மருத்துவ முதுநிலை, டிப்ளமோ படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடில்லை
முதுநிலை மருத்துவப் படிப்பு: அரசு மருத்துவா்களுக்கு 50%  இடங்களை ஒதுக்குவதில் உடன்பாடு இல்லை

சிறப்பு மருத்துவ முதுநிலை, டிப்ளமோ படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடில்லை என உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு மருத்துவா்கள் எம்.சையது பக்ருதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடப்புக் கல்வியாண்டில் சிறப்பு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் 50 % இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும். அதன்பின்னா் தமிழக அரசு இந்தப் படிப்புகளுக்கான முதல்கட்ட ஆன்லைன் கலந்தாய்வைத் தொடங்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் , சிறப்பு மருத்துவ முதுநிலை படிப்பில் அரசு மருத்துவா்களுக்கு 50 % இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக இறுதிஉத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தாா்.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் 50 % இடங்களை ஒதுக்குவதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என வாதிட்டாா். மேலும் இதுதொடா்பாக பதில்மனு தாக்கல் செய்தாா்.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஜி.சங்கரன் வாதிட்டாா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 50 % முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இது தொடா்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. எனவே, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் விரிவான வாதத்தைக் கேட்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை வரும் நவம்பா் 11 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com