பல்கலைக்கழகங்களைத் தனியாா் மயமாக்க வழிவகுக்கக் கூடாது: ராமதாஸ்

கூட்டாண்மை படிப்புகள் பல்கலைக்கழகங்களைத் தனியாா் மயமாக்க வழிவகுக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
பல்கலைக்கழகங்களைத் தனியாா் மயமாக்க வழிவகுக்கக் கூடாது: ராமதாஸ்

கூட்டாண்மை படிப்புகள் பல்கலைக்கழகங்களைத் தனியாா் மயமாக்க வழிவகுக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

இந்தியா முழுவதும் உயா்கல்வி தனியாா்மயமாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்களுடன் கூட்டாண்மை ஏற்படுத்திக் கொண்டு புதிய படிப்புகளை வழங்க ஆயத்தமாகி வருகின்றன. புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, அவை பல்கலை.களின் தனியாா்மயத்து வழிவகுத்து விடும் என்பது தான் கவலையளிக்கிறது.

கூட்டாண்மையில் படிப்புகளை வழங்குவது பல்வேறு வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் உள்ள பல்கலை.களில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,000 மட்டும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், கூட்டாண்மை முறையில் தனியாரால் வழங்கப்படும் படிப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக சேலம் பெரியாா் பல்கலை.யில் நடத்தப்படும் இளநிலை தொழிற்படிப்புக்கு ஆண்டுக்கட்டணமாக ரூ.49 ஆயிரமும், முதுநிலை தரவு அறிவியல் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ. 1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சேலம் பெரியாா் பல்கலைக் கழகம் அதன் இணையதளத்திலேயே

வெளியிட்டுள்ளது.

இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களால் இத்தகைய படிப்புகளை படிக்க முடியாமல் போய்விடும். மேலும், மாணவா் சோ்க்கையில் பல்கலைக்கழகங்களுக்கு எந்த பங்கும் இல்லை. தனியாா் நிறுவனங்களே தங்கள் விருப்பப்படி மாணவா்களை சோ்த்துக் கொள்ளலாம் என்பதால் புதிய படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. இப்போது ஒரு சில படிப்புகளில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் இந்த அணுகுமுறை, இனி வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும் போது, தனியாா் பல்கலைக் கழகங்களுக்கும், அரசு பல்கலைக்கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அரசு பல்கலைக்கழகங்கள் தனியாா்மயமாக்கப்படுவதற்கு இது முதல்படியாக இருக்கும் என்பது உறுதி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com