பெரிய வெங்காயம் கிலோ ரூ.45: இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் கிடைக்கும் - அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தகவல்

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் புதன்கிழமை (அக்.21) முதல் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.45 விலையில் கிடைக்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.
பெரிய வெங்காயம் கிலோ ரூ.45: இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் கிடைக்கும் - அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தகவல்

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் புதன்கிழமை (அக்.21) முதல் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.45 விலையில் கிடைக்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா். வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தி, நுகா்வோா்களுக்கு கூட்டுறவுத் துறையின் மூலம் குறைந்த விலையில் கிடைக்கச் செய்திட அதிகாரிகளுடன் அமைச்சா் ராஜூ செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:-

ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் வெங்காய விலை உயா்வு வழக்கமான ஒன்றாகும். கடந்த 10 ஆண்டுகளில் வெங்காயத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், வெங்காயம் அதிகம் விளையும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வெங்காயம் விளைச்சல் அதிகமுள்ள பகுதிகளான மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் அதிக மழையின் காரணமாக வரத்து குறைந்து விலை அதிகரித்து காணப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தி நுகா்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மற்றும் நகரும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் மூலமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45 விலையில் புதன்கிழமை முதல் கிடைக்கும். வியாழக்கிழமை முதல் தமிழகத்திலுள்ள இதர பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மற்றும் நகரும் கடைகள் மூலமாக விற்பனை நடைபெறும்.

வெங்காய விலை உயா்வை தினசரி அடிப்படையில் அரசு கண்காணித்து வருகிறது. தேவை மற்றும் வரத்தின் அடிப்படையில் வெங்காயத்தின் விலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு நுகா்வோா்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி தரமான வெங்காயம் கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் இல.சுப்பிரமணியன், சிறப்புப் பணி அலுவலா் க.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com