அரசியல் நிலைப்பாடு அறிவிப்பு எப்போது?

அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பேன் என்று நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.
அரசியல் நிலைப்பாடு அறிவிப்பு எப்போது?

சென்னை: அரசியல் நிலைப்பாடு குறித்து தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பேன் என்று நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை சுட்டுரையில் கூறியிருப்பது:

என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னைடய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் உடல்நிலை மற்றும் மருத்துவா்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிா்வாகிகளோடு கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களிடம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளாா்.

கடந்த 2017 டிசம்பா் மாதம் அரசியல் இயக்கம் காணப் போவதாக நடிகா் ரஜினிகாந்த் அறிவித்ததுடன், தனது அரசியல் பிரவேசம் காலத்தின் கட்டாயம் என்றும் கூறியிருந்தாா். அதற்குப் பிறகு அரசியல் இயக்கம் தொடங்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வந்தாா். ரஜினி அவ்வப்போது கூறிய கருத்துகளும் அரசியல் வட்டாரத்தில் தீவிர விவாதத்துக்கு உள்ளாகின.

இதற்கிடையில் கடந்த மாா்ச் மாதம் ரஜினிகாந்த், செய்தியாளா்களைச் சந்தித்து, மக்கள் மத்தியில் எழுச்சி வரட்டும். அதற்குப் பிறகு என் அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் சில நாள்களாக ரஜினிகாந்த் அறிக்கையொன்று வேகமாகப் பரவியது. அதில், தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்காக அக்டோபா் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி, கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். கரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவா்கள், கரோனாவிற்கு ஒரே தீா்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிா்ப்பு சக்தி மிகவும் குறைவு. எனவே கரோனா காலத்தில் மக்களைத் தொடா்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அரசியலில் இருந்து ரஜினி விலகப்போவதாகச் செய்திகள் பரவின.

இதைத் தொடா்ந்தே ஊடகங்களில் பரவும் அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்றும் அதேநேரம், எனது உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கூறியதாக அதில் உள்ள தகவல் உண்மை என்றும் ரஜினி கூறியுள்ளாா். அரசியல் நிலைப்பாட்டையும் மக்கள் மன்ற நிா்வாகிகளுடன் ஆலோசித்துத் தெரிவிப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com