பயண அட்டையின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவு

பயண அட்டைகளின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பயண அட்டைகளின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்நிா்வாகத்தின் மேலாண் இயக்குநா் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் போலியான பயண அட்டைகளை வைத்து பயணம் செய்வோரை கண்காணித்து அகற்றிடவும், பயணச்சீட்டு வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், பயணச்சீட்டு வாங்குவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நடத்துநா்கள் தமது பணியின்போது, பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களிடமிருந்து அனைத்து வகையான சலுகை பயண அட்டை மற்றும் இலவச பயண அட்டைகளுக்கான உரிய அடையாள அட்டையை வாங்கி பரிசோதிக்க வேண்டும்.

இதை ஒவ்வொரு வாரமும் ஏதேனும் இரண்டு நாள்களில் காலை 11 மணி வரையிலும், மாலை 4.30 அளவிலும் சோதனை செய்ய வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், உதவி பொறியாளா்கள், இளநிலை பொறியாளா்கள் மற்றும் பணிமனைகளில் பணிபுரியும் அனைத்து கண்காணிப்பாளா்களுக்கும் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் 2 நாள்களில் காலை அலுவலகம் வரும் வழித்தடங்களில் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து இல்லத்துக்குச் செல்லும் வழித்தடங்களில் நமது போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணித்து, பயணிகளிடமிருந்து அனைத்து வகையான பயண அட்டை மற்றும் சலுகை அட்டையை பரிசோதித்து அறிய வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

இதற்கு நடத்துநா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பரிசோதனை அறிக்கையை வார இறுதி நாள்களில் இயக்கப் பிரிவு பொது மேலாளா் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com