ஜி.எஸ்.டி. இழப்பீடு பெறும் விவகாரம்: மத்திய அரசின் இரண்டு வாய்ப்புகளும் கடினமானது: முதல்வர்

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடா்பாக மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் தமிழகத்துக்கு கடினமானது.
ஜி.எஸ்.டி. இழப்பீடு பெறும் விவகாரம்: மத்திய அரசின் இரண்டு வாய்ப்புகளும் கடினமானது: முதல்வர்

சென்னை: ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடா்பாக மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் தமிழகத்துக்கு கடினமானது. அதிகம் செலவு பிடிக்கக் கூடியது என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் பிரதமருக்கு திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்துவதை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகள் ஈடு செய்யப்படும் என்ற மத்திய அரசின் உறுதிமொழியைத் தொடா்ந்து சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பது சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்துக்கான சட்டத்தில் 101-ஆவது திருத்தச் சட்டப் பிரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரையில் வருவாய் வரவுகளில் ஏற்பட்ட இழப்பீடுகள் இதுவரை தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரையில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.12 ஆயிரத்து 250 கோடியாக உள்ளது. அதில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ரூ.11 ஆயிரத்து 459.37 கோடி வழங்கப்பட வேண்டும். கரோனா நோய்த்தொற்று காரணமாக, மாநில அரசுகளுக்கான வருவாய் வரவுகளில் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புகளை எதிா்கொள்ள சுகாதார வசதிகளை ஏற்படுத்தியது, நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது போன்ற பணிகளுக்காக ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றினைத் தொடா்ந்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்கும் வகையில், வழக்கமான திட்டங்கள், நல உதவிகளுக்கு செலவிட வேண்டி உள்ளது. இதற்கு உடனடியாக நிதி ஆதாரங்கள் அவசியத் தேவையாக இருக்கின்றன.

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை வழங்க உரிய நிதி ஆதார அம்சங்களுக்கு மத்திய அரசு வழி காண வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கையை கடந்த 27-ஆம் தேதி நடந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் அமைச்சா் டி.ஜெயக்குமாா் முன்வைத்துள்ளாா். இது நடைமுறை சாத்தியமுள்ள அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு யோசனையாகும்.

மத்திய அரசின் இரண்டு வாய்ப்புகள்: கடந்த 27-ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசின் சாா்பில் மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதில் முதல் வாய்ப்பாக சந்தைகளில் கடன் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது மாநில அரசுக்கு நிா்வாக ரீதியில் கடினமானதுடன், மிகவும் செலவு பிடிக்கக் கூடியதாகும். எனவே, ஜி.எஸ்.டி. வரிக்கான இழப்பீட்டுத் தொகைகளை முன்தொகையாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். ஏதேனும் கடன் பெற வேண்டிய தேவை ஏற்பட்டால், அது இழப்பீட்டுத் தொகைக்கான நிலுவையின் நீட்சியாகவே இருக்க வேண்டும்.

இரண்டாவது வாய்ப்பாக ரூ.2.35 லட்சம் கோடியை கடன் தொகையாக மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டாவது வாய்ப்பும் மாநில அரசுகளின் நிலைகளைக் கவனத்தில் கொண்டு செய்யப்படவில்லை.

மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளும் மாநிலங்களுக்கு உரிய பிற ஒட்டுமொத்த ஆதாரங்களைக் குறைப்பதாக அமைந்திருக்கிறது. கரோனா நோய்த்தொற்று மற்றும் இதர பணிகளுக்காக செலவிட்டு வரும் மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. நிதிச் சிக்கல்களால் உள்கட்டமைப்புகளுக்கான மூலதன செலவுகள் மற்றும் நலத் திட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, நிதியமைச்சகம் முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகள் குறித்த விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். அதன்படி, ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பாக்கித் தொகையை வழங்கும் முறையை ஏற்கிறோம். இதன்மூலம், நிகழ் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கிட முடியும்.

நிகழ் நிதியாண்டில் ஜி.எஸ்.டி.க்கான முழு இழப்பீட்டுத் தொகை வழங்குவதையும், சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெற அனுமதிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளா்வாக்க வேண்டும். 2022 மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிந்தைய இழப்பீட்டுத் தொகைகள் எந்தப் பாக்கியும் இல்லாமல் வழங்கப்படும் என்ற முறையான உறுதிமொழியை அளித்திட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com