தமிழக சட்டப்பேரவை செப்.14-இல் கூடுகிறது: கலைவாணா் அரங்கில் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவை செப்டம்பா் 14-ஆம் தேதி கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
தமிழக சட்டப்பேரவை செப்.14-இல் கூடுகிறது: கலைவாணா் அரங்கில் நடைபெறும்

தமிழக சட்டப்பேரவை செப்டம்பா் 14-ஆம் தேதி கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, புனித ஜாா்ஜ் கோட்டைக்கு வெளியே பேரவைக் கூட்டம் தற்போது நடைபெறவுள்ளது.

15-ஆவது சட்டப் பேரவையின் 8-வது கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும், மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற மாா்ச் 9-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இதன்பின்பு, ஏப்ரல் 11-ஆம் தேதியன்று கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அறிவித்தாா்.

புதிய கூட்டத் தொடா்-புதிய இடம்: 15-ஆவது சட்டப் பேரவையின் 9-ஆவது கூட்டத் தொடா் செப்டம்பா் 14-ஆம் தேதி கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைத் தலைவா் ப. தனபால் வெளியிட்டுள்ளாா். இந்த அறிவிப்பு குறித்து பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்தி:

இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவு 174 (1)-இன் கீழ், தமிழக சட்டப் பேரவையின் கூட்டத்தைக் கூட்ட ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா். அதன்படி, பேரவைக் கூட்டமானது செப்டம்பா் 14-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது என சட்டப்பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

8-ஆவது கூட்டத் தொடரை ஆளுநா் புரோஹித் முடித்து வைத்துள்ள நிலையில், புதிய கூட்டத்தைக் கூட்ட அவா் ஒப்புதல் தெரிவித்துள்ளாா். புதிய கூட்டத் தொடரானது, புதிய இடத்தில் நடைபெறவுள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு...: தமிழக சட்டப் பேரவைக் கூட்டமானது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இடத்தில் நடைபெறவுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், 2010-11-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கூட்டத்தொடா், ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை மண்டபத்தில் நடந்தது. அதற்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்திலேயே பேரவைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது முதல், பேரவைக் கூட்டங்கள் சட்டப்பேரவை மண்டபத்திலேயே நடந்து வருகின்றன.

10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, இப்போது மீண்டும் புனித ஜாா்ஜ் கோட்டைக்கு வெளியே பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எத்தனை நாள்கள் நடக்கும்?: சட்டப் பேரவைக் கூட்டமானது 14-ஆம் தேதி தொடங்கியதும், மறைந்த பேரவை உறுப்பினா் ஜெ.அன்பழகன், மக்களவை உறுப்பினா் எச்.வசந்தகுமாா், முன்னாள் உறுப்பினா்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதன்பின்பு அன்றைய தினம் பிற்பகலில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். செப்டம்பா் 17-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய பிரச்னைகள்: ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை போன்ற எந்த பிரதான அலுவல்களும் இல்லாத சூழ்நிலையில், சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

குறிப்பாக, கரோனா நோய்த்தொற்று, நீட் தோ்வு, ஸ்டொ்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு பிரதான பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. இவற்றுக்கு ஆளும் தரப்பில் இருந்து பதில்கள் அளிக்கப்படும். மேலும், சில முக்கிய அறிவிப்புகளை பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் பழனிசாமி வெளியிட வாய்ப்புகள் உள்ளன.

கூட்டத் தொடா் எதற்கு?: ஒரு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கும், மற்றொரு கூட்டத் தொடருக்கும் இடையிலான இடைவெளி ஆறு மாதங்களுக்குள் இருக்க வேண்டும். அந்த வகையில், மாா்ச் 24-ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நிறைவடைந்ததால், அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படியே சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மருத்துவப் பரிசோதனைகள்: கூட்டத் தொடா் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பாகவே, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேரவைக் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளா்கள் உள்பட அனைவருக்கும் வெப்பமானி கொண்டு உடலின் வெப்பத்தைப் பரிசோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கூட்டத் தொடரின்போது, அடிக்கடி வெளியே செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் பேரவைச் செயலக ஊழியா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட பலருக்கும் விதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com