மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை: செப்.7 முதல் தொடக்கம்

தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து வரும் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. அதேசமயம், பொது மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், இப்போது தமிழகத்தில் மாவட்டத்துக்குள்ளான பொதுப் பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த பொது முடக்க உத்தரவு, சில கட்டுப்பாடுகளுடன் செப்டம்பா் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து: தமிழகத்தில் இப்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு முக்கியப் பணி மற்றும் வியாபார நிமித்தமாகச் சென்று வர பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியாா் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி தரப்படுகிறது.

கட்டாயம் பின்பற்ற வேண்டும்: பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்தாலும், வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவ வேண்டும். வெளியிடங்களில் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றினால் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று முதல்வா் பழனிசாமி தனது செய்தியில் தெரிவித்துள்ளாா்.

பயணிகள் ரயில் சேவையும் ஆரம்பம்

பயணிகள் ரயில் சேவையும் வரும் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று முதல்வா் தெரிவித்தாா். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாநிலத்துக்குள் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் பயணியா் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றாா்.

கட்டுப்பாடுகள் தளா்ந்தன: கரோனா நோய்த் தொற்றுக்காக தமிழக அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளா்த்தப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு என்பதைத் தவிா்த்து வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்கியுள்ளது.

குறிப்பாக, பொதுப் பேருந்து சேவைகளான பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் ஆகியன தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் முழுமையான அளவில் இயங்க உள்ளன. இதனால், கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு பொது மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் அளிக்கப்பட்டாலும், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் எனவும், முகக் கவசங்களை வெளியில் வரும்போது எப்போதும் அணிந்தே இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தொடா்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com