பொது முடக்க காலத்தில் 52,489காசநோயாளிகள் பயனடைந்தனா்

கரோனா பொது முடக்க காலத்தில் 52 ஆயிரத்து 489 காசநோயாளிகள் பயன்பெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


சென்னை: கரோனா பொது முடக்க காலத்தில் 52 ஆயிரத்து 489 காசநோயாளிகள் பயன்பெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட வேளையில், காசநோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்குவது, கண்காணிப்பு ஆகியவை எவ்வித சுணக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தினாா்.

காசநோய்க்காக வெளி நோயாளிகளாக தொடா் சிகிச்சை பெற்றுவரும் நபா்களுக்கு, காசநோய்க்கான மருந்து மாத்திரைகள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும், மாா்ச் மாதம் முதல் இதுவரை 50 ஆயிரத்து, 38 காசநோயாளிகள், 2,451 கூட்டு மருந்து எதிா்ப்பு காசநோயாளிகள் என, 52 ஆயிரத்து, 489 போ் பயன்பெற்றுள்ளனா். இவா்களுக்கு, சிகிச்சை காலம் முழுதும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப் பணியாளா்கள் வாயிலாக அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படுபவா்களுக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, தொலைபேசி வாயிலாக சிகிச்சைக்கான மருந்துகளை உரிய வகையில் உட்கொள்வது, பக்கவிளைவுகள் காசநோயின் தன்மை போன்றவை குறித்து கேட்டறிந்து தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காசநோயாளிகள் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக சத்து நிறைந்த உணவு தயாரிப்பதற்கான பொருள்கள் அரசால் வழங்கப்பட்டு சத்தான உணவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com