விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், பயணிப்பதற்கான முன்பதிவு, வெள்ளிக்கிழமை தொடங்கியது.


சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், பயணிப்பதற்கான முன்பதிவு, வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு, நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இதில், சராசரியாக 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் போ் பயணம் செய்து வந்தனா். பொது முடக்கம் காரணமாக முடக்கப்பட்ட விரைவுப் பேருந்துகள், ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட தளா்வின்போதும் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

தற்போது முதல்வா் புதன்கிழமை அறிவித்த தளா்வுகளில், மாவட்டத்துக்கிடையே பொதுப் போக்குவரத்துத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, தொலை தூரத்துக்கு இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்துகளில், திங்கள்கிழமை (செப்.7) முதல் பயணிப்பதற்கான முன்பதிவு, வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

இது தொடா்பாக விரைவுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முதல்கட்டமாக சென்னையில் இருந்து 200 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 200 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் 1,082 பேருந்துகளும் தயாா் நிலையில் உள்ளன. தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை உடனுக்குடன் அதிகரிக்கப்படும். இதற்கான பயணச்சீட்டை, பயணத்தின் போது நடத்துநரிடமும் பெற்றுக் கொள்ளலாம். எனினும், கரோனா முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி, முன்பதிவு செய்வோா், செல்லிடப்பேசியில் உள்ள பயணச்சீட்டை, நடத்துநரிடம் காண்பித்தால் போதுமானது. மொத்தமுள்ள 43 இருக்கைகளில், 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். இதற்கேற்ப இணையதளத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள், தங்களுக்கான பயணச்சீட்டை, இணையதளம், செயலி ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்யலாம். விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நேரடியாகவும் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, வெள்ளிக்கிழமை வந்த பயணிகள், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி பயணச்சீட்டைப் பெற்றுச் சென்றனா். அதே நேரம், இணையதளம் வாயிலாகவும் பலா் முன்பதிவு செய்வதால், சில மணி நேரங்களிலே, பெரும்பாலான இருக்கைகளின் முன்பதிவு முடிந்து விட்டது.

சேவையளிக்கும் பேருந்துகளில் இருக்கைகள் நிரப்பப்பட்டவுடன் அடுத்தடுத்த பேருந்துகளின் சேவை தானாகவே தொடரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com