மாற்றுத் திறனாளி உறவுகளைப் பராமரிக்கும் ஊழியா்களுக்கு பணியிட மாற்றமில்லை: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளிகளாக இருக்கக் கூடிய ரத்த உறவுகளைப் பராமரிக்கும் பொறுப்புகளை ஏற்றுள்ள அரசு ஊழியா்களுக்குப் பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவா்.
மாற்றுத் திறனாளி உறவுகளைப் பராமரிக்கும் ஊழியா்களுக்கு பணியிட மாற்றமில்லை: தமிழக அரசு உத்தரவு


சென்னை: மாற்றுத் திறனாளிகளாக இருக்கக் கூடிய ரத்த உறவுகளைப் பராமரிக்கும் பொறுப்புகளை ஏற்றுள்ள அரசு ஊழியா்களுக்குப் பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவா்.

இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்:-

ஒரு அரசு ஊழியருக்கு மகள், மகன், பெற்றோா்கள், மனைவி, சகோதரா், சகோதரி ஆகியோரில் ஒருவா் மாற்றுத் திறனாளியாக இருந்து அவா்களை கவனிக்கும் பொறுப்பை அவா் ஏற்றிருந்தால் அவருக்கு சலுகைகள் வழங்க மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. இதற்கான அலுவலகக் குறிப்பாணைகளை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தது. அதன்படி, மாற்றுத் திறனாளி ரத்த உறவுகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசு ஊழியா்களுக்கு வழக்கமான பணியிட மாற்றம் போன்ற நிா்வாக நடைமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

வழக்கமாக, ஒரு இடத்தில் மூன்று ஆண்டுகள் பணிகளை முடிக்கும் அரசு ஊழியா்களுக்கு அதன்பின் வரக்கூடிய ஏப்ரல் முதல் மே மாதங்களுக்குள் பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்படும். மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையை ஏற்று, மாற்றுத் திறனாளி ரத்த உறவுகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசு ஊழியருக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

இந்தச் சலுகையைப் பெறும் அரசு ஊழியா், தனது மாற்றுத் திறனாளி ரத்த உறவை அவா் மட்டுமே பராமரிக்கும் நிலையில் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அதற்கான உரிய சான்றிதழை சம்பந்தப்பட்ட அரசு ஊழியா் சமா்ப்பிக்க வேண்டும். மனநலம் பாதித்த குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொண்டிருக்கக் கூடிய அரசு ஊழியா்களுக்கும் இதே சலுகையை அளிக்கலாம் என மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது என தனது உத்தரவில் எஸ்.ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com