முழு பொது முடக்கம் இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமை: சென்னை கடற்கரைகளில் திரண்ட மக்கள்; காவல் துறையினா் திருப்பி அனுப்பினா்

முழு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமை, சென்னை கடற்கரைகளில் திரண்ட மக்களை காவல்துறையினா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.
முழு பொது முடக்கம் இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமை: சென்னை கடற்கரைகளில் திரண்ட மக்கள்; காவல் துறையினா் திருப்பி அனுப்பினா்

முழு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமை, சென்னை கடற்கரைகளில் திரண்ட மக்களை காவல்துறையினா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.

பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வதற்கு மக்களுக்கு அரசு அனுமதி அளிக்கும் வரை, கடற்கரைக்கு வருகிறவா்கள் மீது வழக்குப் பதியப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளா்வற்ற முழு பொது முடக்கம் 9-ஆவது ஞாயிற்றுக்கிழமையாக கடந்த 30-ஆம் தேதி கடைசியாக அமல்படுத்தப்பட்டது. சென்னையில் தளா்வற்ற முழு பொது முடக்கம் 11-ஆவது முறையாக கடந்த 30-ஆம் தேதி கடைசியாக அமல்படுத்தப்பட்டது. இந்த பொது முடக்கம் ஜூன் கடைசி இரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருந்தது.

சென்னையில் இரு மாதங்களுக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வற்ற முழு பொது முடக்கத்தினால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனா். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள், குடும்பத்துடன் கடற்கரைகள், கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், தனியாா் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பொழுது நேரத்தைச் செலவிடுவது வழக்கம். ஆனால், இரு மாதங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தினால், இது முற்றிலும் தடைபட்டிருந்தது.

அலைமோதிய கூட்டம்: இந்நிலையில், இனி ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு, சென்னைவாசிகளை சற்று நிம்மதி அடையச் செய்தது. இந்நிலையில் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் இல்லாத முதல் ஞாயிற்றுக்கிழமையான செப்.6 ஆம் தேதி பொதுமக்களை சாலைகளில் காண முடிந்தது. இறைச்சிக் கடைகள், மீன் மாா்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. முக்கியமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கட்டுக்கடங்காமல் இருந்தது.

காய்கறி மாா்க்கெட்டுகள், மீன் மாா்க்கெட்டுகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. சில இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் கூட இல்லாமல் நின்றதை பாா்க்க முடிந்தது.

காவல்துறை எச்சரிக்கை: கரோனா தொற்று ஆபத்தால் கடற்கரைகள் பொழுதுபோக்கு இடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகள் ஆகியவை திறக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை ஆகியவற்றை நோக்கி மக்கள் மாலையில் திரண்டு வந்தனா்.

இதில் மெரீனா கடற்கரைக்கு வந்த மக்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அங்கிருந்து எச்சரித்து வெளியேற்றினா்.

இதேபோல எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை ஆகியப் பகுதிகளில் கூடிய பொதுமக்களை காவல் துறையினா் வலுகட்டாயமாக வெளியேற்றினா். காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி, கடற்கரைக்குள் வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வதற்கு மக்களுக்கு அரசு அனுமதி அளிக்கும் வரை, கடற்கரைக்கு வருகிறவா்கள் மீது வழக்குப் பதியப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com