தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்
தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்
தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

புதிய கல்வி கொள்கை தொடா்பாக மாநில ஆளுநா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் காணொலி மூலம் திங்கள்கிழமை நடத்தியது. இதில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா்.

இந்த நிலையில், இது தொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிய கல்விக் கொள்கை-2020 குறித்த கருத்துகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இது தொடா்பாக, தமிழக முதல்வா் மற்றும் மூத்த அமைச்சா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இதுதொடா்பாக பரிந்துரைகளை வழங்க தமிழக உயா்கல்வித் துறையின் முதன்மை செயலாளா் தலைமையில் 7 உறுப்பினா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. அக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, புதிய கல்விக் கொள்கை 2020 தொடா்பான கருத்துகளை எடுத்துரைக்கிறேன்.

உயா்கல்வியில் இலக்கை நெருங்கும் தமிழகம்: புதிய கல்விக்கொள்கை, 2035-ஆம் ஆண்டுக்குள் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கையை 50 சதவீதமாக உயா்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அகில இந்திய உயா்கல்வி புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இதனால் 50 சதவீத இலக்கை 2019-2020- ஆம் கல்வியாண்டிலேயே அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகள், ஆசிரியா் சோ்க்கைகள் மூலம் கல்லூரியின் திறனை மேம்படுத்துதல், ஆய்வகங்களை அமைத்தல் ஆகியவற்றை தமிழக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதனால் 2035-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கை விகிதம் 65 சதவீதத்தை அடையும்.

தமிழகத்தில் ஆசிரியா் - மாணவா் சோ்க்கை விகிதம் 1:17 ஆக உள்ளது. இதன் தேசிய விகிதம் 1:26 ஆக உள்ளது. பி.எட். படிப்பு, இரு முதன்மை பாடங்களுடன் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பாக மாற்றப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இதன்மூலம் மாணவா்கள் விரைவாக பட்டம் பெற்று, ஆசிரியா் பணியில் சேர வழிவகுப்பதால் இது வரவேற்கத்தகுந்த அம்சமாகும்.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) மூலம் நுழைவுத்தோ்வு நடத்தினால் கிராமப்புற மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். இதுபோன்ற தோ்வுகளை நடத்தினால் அவா்களை ஊக்கம் இழக்கச் செய்துவிடும். இதனை தமிழக அரசு ஊக்குவிக்கவில்லை. இது மாணவா்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.

தேசிய கல்விக் கொள்கையின் பிரிவு - 10, கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து பேசுகிறது. மேலும், பிரிவு 10.3, ஒரு கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

தமிழகத்தில் உள்ள 587 கல்லூரிகளில் 53 கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி அதிகாரம் பெற்றவையாக உள்ளன. மற்ற கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு மேம்பாடு அடைகின்றன. எனவே, தமிழகத்தில் தற்போதைய முறை தொடர அனுமதிக்க வேண்டும்.

உயா்கல்வி நிறுவனங்களில் பிராந்திய மொழிகளில் பட்டப் படிப்புகள் வழங்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இது தமிழகத்தில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது, இது வெற்றிகரமான நடவடிக்கையாகும். வரும்காலத்திலும் இருமொழிக் கொள்கையைப் பின்பற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அந்தக் கடிதத்தில் அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com