கரோனா பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சம் கோரி போராட்டம்

கரோனா பாதித்த மாநகராட்சி தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி 500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் முற்றுகை

சென்னை: சென்னையில் கரோனா பாதித்த மாநகராட்சி தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி ரிப்பன் மாளிகையை திங்கள்கிழமை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா், அவா்களில் பெரும்பாலானோா் பணிக்குத் திரும்பி உள்ளனா். நோய்த்தொற்றுக்குள்ளான தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சாா்பில் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்த செங்கொடி சங்கத் தலைவா் எஸ்.மகேந்திரன் கூறியது: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் ரூ.624.50 வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.

கரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை ரூ. 2,500-மும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளா்கள், பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 2 லட்சம் உதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது என்றாா்.

இதைத் தொடா்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்தில் செங்கொடி சங்க பொதுச் செயலா் சீனிவாசலு, பொருளாளா் பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com