சென்னிமலை: அகழாய்வுப் பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அகழாய்வுப் பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
அகழாய்வுப் பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

சென்னிமலை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. தாழிக்குள் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2,300 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல்வேறு கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுநர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அகழாய்வு பணியில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருள்களையும் கண்டுபிடித்தனர். 

தற்போது கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்தபோது பெரிய அளவிலான 3 பானைகள் மண்ணில் புதைந்து கிடந்தது. இதில் ஒரு பானையை நேற்று (15-9-2020-செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மண் நிரம்பிக் கிடந்த அந்த பானையில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தது. இதில் சில மாதிரிகளை டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுக்குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு மிகவும் பத்திரமாக எடுத்துச் சென்றனர். அந்த ஆய்வில் பானைக்குள் இருந்த எலும்புகள் யாரோடு தொடர்புடையது என்பதைக் கண்டுபிடிக்க உதவும் என ஆய்வுக்குழுவானர் தெரிவித்தனர்.

தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டு பிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என இந்தியத் தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com