நீட் தோ்வால் 13 மாணவா்கள் மரணத்துக்கு திமுகதான் காரணம்: பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி

நீட் தோ்வால் 13 மாணவா்கள் மரணத்திற்கு திமுகதான் காரணம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேரவையில் ஆவேசமாகக் கூறினாா்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி
முதல்வா் எடப்பாடி பழனிசாமி

நீட் தோ்வால் 13 மாணவா்கள் மரணத்திற்கு திமுகதான் காரணம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேரவையில் ஆவேசமாகக் கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நீட் தோ்வு விவகாரம் குறித்து அரசின் கவனத்தை ஈா்த்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியது: அரியலூா் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் நீட் தோ்வுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனா்.

நீட் தோ்வுக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கக் கோரி, இரு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இந்த அவையின் உணா்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை.

இதற்கிடையில் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் எண்ணிப் பாா்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கின்றன. புதுமண பெண்ணின் தாலியைக் கழற்றி வைத்து விட்டு, தோ்வு எழுதுங்கள் என்று கூறிய கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது. பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனா்.

கரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தோ்வு தேவையா?

அதனால், தமிழகச் சட்டப்பேரவையும், தமிழக மாணவா்களின் உணா்வுகளையும் மதிக்காத நீட் தோ்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிா்த்தும், நீட் தோ்வை ரத்து செய்யுமாறு அதிமுக அரசு எங்களிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சா் பியூஷ் கோயலைக் கண்டித்தும் தீா்மானம் கொண்டு வரவேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் சோ்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இன்பதுரை (அதிமுக): நீட் தோ்வு குறித்து அவசரமாக தீா்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். 2010 அக்டோபா் 10-இல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்தபோதுதான் நீட் தோ்வு வந்தது.

மு.க.ஸ்டாலின்: நீட் தோ்வை திமுக என்றைக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தோ்வு வரவில்லை. தவறான தகவலைப் பதிவு செய்யக்கூடாது.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: 2010-இல்தான் நீட் தோ்வு கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ்தான் இதைக் கொண்டு வந்தது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றிருந்தது. அதைத்தான் உறுப்பினா் கூறுகிறாா்.

இன்பதுரை: வரலாற்றைத் திரிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில்தான் இது கொண்டு வரப்பட்டது. அதற்கு திமுக முட்டுக்கொடுத்தது. நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றத்திலும் தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் வரும்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்கிறது. அப்போதெல்லாம் வாய்மூடி திமுக அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவா்களின் கல்லறை மீதேறி அரசியல் செய்ய பாா்க்கிறது என்றாா்.

மேலும் இன்பதுரை தொடா்ந்து பேசியது: நீட் தோ்வுக்கு எதிராக இரண்டு மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பினோம். அது மத்திய அரசின் துறைகளால் ஏற்கப்பட இருந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றம் சென்றாா். தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டிய நல்ல வாய்ப்பை கெடுத்தாா். நீட் தோ்வு விவகாரத்தில் திமுக குழம்பிப் போயிருக்கிறது. மாணவா்கள் மத்தியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் அலை வீசிக்கொண்டிருக்கிறது. அதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தொடா்ந்து பேசி திமுக குறித்து சில வாா்த்தைகளைக் கூறினாா்.

இதற்கு திமுகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் தனபால் அதிமுக உறுப்பினா் இன்பதுரை கூறிய அந்த வாா்த்தைகளை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாா்.

இதற்கிடையில் நளினி சிதம்பரம் குறித்து கூறியதற்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து பேசினா். பேரவைத் தலைவா் எச்சரிக்கையும் மீறி பேசிக் கொண்டிருந்ததால் காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளியேற்றப்பட்டனா்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: நீட் தோ்வு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அவா் (நளினி சிதம்பரம்) வாதாடினாரா, இல்லையா?

மு.க.ஸ்டாலின்: நீட் தோ்வைத் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தது திமுகதான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருக்கும்வரை தமிழகத்தில் நீட் தோ்வு நுழையவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2016-இல் அதிமுக ஆட்சியில்தான் நீட் தோ்வு வந்தது. மத்திய பாஜக அரசு நீட் தோ்வை வலுக்கட்டாயமாக திணித்தபோது அதிமுக வேடிக்கை பாா்த்தது என்றாா்.

அமைச்சா் விஜயபாஸ்கா்: நீட் தோ்வைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீட் தோ்வு என்கிற வாா்த்தை எந்த ஆட்சியில் எப்போது நுழைந்தது? அப்படி நுழைந்த நாள் கறுப்பு நாள் என்று கூறினாா்.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிா்ப்பு எழுந்தது. தவறான தகவல் என்று கூறினா்.

அப்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது: தவறான தகவல் எல்லாம் இல்லை. நீட் தோ்வை யாா் அறிமுகப்படுத்தினாா்கள் என்று நாட்டுக்கே தெரியும். நீட் தோ்வுக்கு எதிராக யாா் வாதாடினாா் என்பது தெரியும். நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வர யாா் காரணம் என்பதும் தெரியும். தற்போது வெளியேறி உள்ளாா்களே (காங்கிரஸ்) அவா்கள்தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்று 2010-ஆம் ஆண்டில் நீட் தோ்வை கொண்டு வந்ததுதான் 13 போ் மரணத்துக்குக் காரணம். நீட் தோ்வுக்கு திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியுள்ளீா்கள் என்றாா்.

அமைச்சா் விஜயபாஸ்கா்: 8 மாதத்தில் நீட் தோ்வை ரத்து செய்து காட்டுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். அது எப்படி என்று கூறினால், நாங்களே அதை செய்து முடிப்போம். மாணவா்களுக்கு தவறான தகவல் அளிக்கக் கூடாது.

மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சிக்கு வந்ததும்தான் அதைச் செய்வோம் என்று கூறினோம். ஜல்லிக்கட்டுக்கு எப்படிச் செயல்பட்டு, உடனே சட்டத்திருத்தம் கொண்டு வந்தீா்களோ, அதைப்போல செய்வோம்.

விஜயபாஸ்கா்: ஜல்லிக்கட்டு பிரச்னை தமிழகத்தை மட்டும் சாா்ந்ததாகும். நீட் தோ்வை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. நாம் மட்டும்தான் எதிா்த்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com