புதிய கல்விக் கொள்கை விவகாரம்: பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
புதிய கல்விக் கொள்கை விவகாரம்: பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்: 
மு.க.ஸ்டாலின்: புதிய கல்விக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர் கூறிய கருத்தையெல்லாம் அடிப்படையாக வைத்து, சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இது குறித்து முதல்வர் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன்: புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அறிக்கை அளித்த பிறகு முதல்வர் நல்ல நடவடிக்கை எடுப்பார்.
துரைமுருகன்: புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதையெல்லாம் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாகக் கூறியுள்ளார். முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எல்லாம் எழுதியுள்ளார். அது அரசின் கருத்தாகவும் மத்திய அரசுக்குப் போயிருக்கிறது. அதன் அடிப்படையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால், வரவேற்கிறோம். அமைச்சர் கூறியதற்கு மேல் எந்தக் கல்வி வல்லுநர்களும் புதிதாகக் கண்டுபிடித்துச் சொல்லப் போவதில்லை. அதனால், தீர்மானம் நிறைவேற்றலாம்.
அமைச்சர் செங்கோட்டையன்: மத்திய அரசு எவ்வளவுதான் வலியுறுத்தினாலும், சில முடிவுகளில் இருந்து அதிமுக அரசு பின்வாங்காது என்றார்.
அப்போது  குறுக்கிட்ட மு.க.ஸ்டாலின், "அமைச்சர் கூறும் விளக்கத்தை முழுமையாக ஏற்கிறோம். ஆனால், இதைத் தீர்மானமாகப் போடுவதற்கு அரசு ஏன் தயங்குகிறது. அதை வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்'  என அறிவித்தார். 
அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: புதிய கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அதை ஆய்வு செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வரும் கருத்துகளின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை எதிர்காலத்தில் அரசு சிந்திக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com