கரோனா தடுப்புக்காக ரூ.9,027 கோடி ஒதுக்கீடு: துணை நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் தகவல்

கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக ரூ.9 ஆயிரத்து 27 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக  துணை நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
கரோனா தடுப்புக்காக ரூ.9,027 கோடி ஒதுக்கீடு: துணை நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் தகவல்

சென்னை:  கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக ரூ.9 ஆயிரத்து 27 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக  துணை நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் எதிர்பாராத தேவைகளுக்காக செலவிடப்பட்ட தொகைகளுக்கு பேரவையின் ஒப்புதலைப் பெறும் வகையில், துணை நிதி நிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.  அதன் விவரம்:
நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே கரோனா நோய்த் தொற்று நம் அனைவரையும் பாதித்துள்ளது. எனவே, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார வசதிகள் அளித்தல் போன்ற பல்வேறு அம்சங்களுக்காக கூடுதலான செலவுகளை மாநில அரசு செய்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகளின் அளவு முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக உள்ளது. கரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக துணை மானியக் கோரிக்கையில் மொத்தமாக ரூ.9 ஆயிரத்து 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றினால் பொது விநியோக அமைப்பு மூலம் வழக்கத்துக்கு அதிகமாகப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அதற்காக ரூ.3 ஆயிரத்து 359.12 கோடி நிதியானது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று நிவாரண உதவியாக குடும்ப அட்டைதாரர்கள், நல வாரிய உறுப்பினர்களுக்கு ரொக்க உதவித் தொகை அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.3 ஆயிரத்து 168.64 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கரோனா கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1,049.56 கோடி தொகையானது வருவாய்த் துறையின் கீழ் சேர்க்கப்ப்டடுள்ளது.
நோய்த் தொற்றை கண்டறிவதற்கான மருத்துவக் கருவிகள், சாதனங்கள் வாங்கிய வகையில் சுகாதாரத் துறைக்கு ரூ.1,109.42 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதனக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்காக கூடுதல் பங்கு மூலதன உதவியாக ரூ.437 கோடி தொகையானது தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதியாணையத்தின் இரண்டாம் தவணை பொது அடிப்படை மானியத்தை வழங்க ரூ.987.85 கோடி நிதியானது அனுமதிக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கு ரூ.170.28 கோடி அனுமதிக்கப்ப்டடுள்ளது. தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்த வேளாண் துறைக்கு ரூ.107.40 கோடியும், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த இப்போதைக்கு ரூ.100 கோடியும் துணை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேனி மாவட்டம் வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் பண்ணைகிணறு ஆகியவற்றில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க ரூ.82.60 கோடியும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய்த் துறை கட்டடங்களுக்காக ரூ.161.31 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், கண்காணிப்புக் கேமிராக்கள் நிறுவுவதற்கு ரூ.580.87 கோடி அனுமதிக்கப்படுகிறது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதல் மூலதன மானியமாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்று துணை முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையானது குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com