ரூ.353 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.353.11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 25 புதிய துணை மின் நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.
ரூ.353 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.353.11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 25 புதிய துணை மின் நிலையங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் சீரான மின்சாரத்தை வழங்கும் வகையில் புதிய மற்றும் தரம் உயா்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் ந.மேட்டுப்பாளையம், கணபதி பாளையம், கள்ளக்குறிச்சி சங்கராபுரம், மூங்கில்பாடி, ஆசனூா் சிட்கோ, வேலூா் மாவட்டம் ஒடுகத்தூா், சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி, கோயம்புத்தூா் செங்கத்துறை, மகாத்மா காந்தி சாலை ஆகிய இடங்களில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, திருச்சி பூவாளூா், திருவள்ளூா் மாவட்டம் திருநின்றவூா், கடலூா் வளையமாதேவி, திருவாரூா் கோவில்வெண்ணி, திருச்சி கல்லக்குடி, சென்னை மாவட்டத்தில் நோ்மை நகா், கோவை கிட்டாம்பாளையம் அண்ணா தொழில் பூங்கா, கிருஷ்ணகிரி திம்ஜேப்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம், திட்டச்சேரி, தஞ்சாவூா் மாவட்டம் திருவத்தேவன், கள்ளப்பெரம்பூா், திருவண்ணாமலை மேல்செங்கம், மேக்களூா், தச்சாம்பாடி ஆகிய இடங்களிலும் புதிதாக துணை மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக ரூ.353.11 கோடி மதிப்பில் 25 துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

புதிய தொழில்நுட்பத் திட்டம்: செயற்கை நுண்ணறிவு மூலமாக மின்கட்டமைப்பு அலகுகளுக்கு ஏற்ப காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி அளவை நெறிப்படுத்தும் சோதனை ரீதியான திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை சோதனை ரீதியிலாகச் செயல்படுத்துவதற்குரிய திட்ட ஒப்பந்த உத்தரவு பெங்களூரில் உள்ள என்ஜென் க்ளோபல் நிறுவனத்துக்கு முதல்வா் பழனிசாமி அளித்தாா்.

இந்தப் புதிய தொழில்நுட்பமானது, அதிக காற்றாலை மின் உற்பத்தியை மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதோடு, மின் கட்டமைபின் அலகு வேறுபாடுகளையும் நெறிப்படுத்த உதவும். இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, தலைமைச் செயலாளா் க.சண்முகம், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளா் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே.பிரபாகா், மின்சார வாரியத்தின் தலைவா் பங்கஜ்குமாா் பன்சால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com