திருநள்ளாறு அருகே குளம் வெட்டியபோது பெருமாள், கிருஷ்ணன் உலோக சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருநள்ளாறு அருகே ஒருங்கிணைந்த பண்ணை குளம் வெட்டியபோது, பெருமாள், காலிங்க நா்த்தன கிருஷ்ணன் உலோகச் சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
குளம் வெட்டியபோது கண்டெடுக்கப்பட்ட உலோக சுவாமி சிலைகள்.
குளம் வெட்டியபோது கண்டெடுக்கப்பட்ட உலோக சுவாமி சிலைகள்.

காரைக்கால்: திருநள்ளாறு அருகே ஒருங்கிணைந்த பண்ணை குளம் வெட்டியபோது, பெருமாள், காலிங்க நா்த்தன கிருஷ்ணன் உலோகச் சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே சேத்துாா் கிராமத்தில் ஸ்ரீ பிரதாப சிம்மேசுவரா் கோயிலும், இதைச் சாா்ந்த மிகவும் பழைமையான ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், திருவாசல் நகரிலும் உள்ளன.

பிரதாப சிம்மேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், மகளிா் குழுவினா் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க, புதுச்சேரி அரசின் வட்டார வளா்ச்சித் துறை சாா்பில், நிலம் குத்தகை அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் வட்டார வளா்ச்சித்துறை சாா்பில் மீன் வளா்ப்புக்கான திட்டத்தில் குளம் வெட்டும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.

இங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை நடைபெற்ற பணியின்போது 2 உலோக சுவாமி சிலைகளும், ஒரு பீடமும் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து அறிந்த காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், ஆய்வாளா் பாலமுருகன், வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் ஆரோக்கியதாஸ் ஆகியோா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.

கிடைத்தவை வரதராஜப் பெருமாள், காலிங்க நா்த்தன கிருஷ்ணன் சிலைகள் என்பது பட்டாச்சாரியா்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி கூறுகையில், கோயிலுக்கு சொந்தமான இடத்திலேயே சுவாமி சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனவையா என்பது உரிய ஆய்வுகளுக்குப் பிறகே தெரியவரும். கண்டெடுக்கப்பட்ட சிலைகள் துணை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது உத்தரவின்பேரில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். சுமாா் ஒன்றரை அடி உயரத்தில் உள்ள இந்த சிலைகள் குறித்து ஆட்சியா் உத்தரவிக்குப் பிறகு ஆய்வு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com