சென்னையில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம்: பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கோரிக்கை

அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை சென்னையில் அமைக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.
சென்னையில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம்: பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கோரிக்கை


சென்னை: அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை சென்னையில் அமைக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்தின் விவரம்:-

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுா்வேதம், யோகா, யுனானி, இயற்கை மருத்துவம் ஆகியவற்றுக்கு தங்களது தலைமையிலான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில், அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், சித்த மருத்துவ கழகத்தை நடப்பு நிதியாண்டிலேயே தமிழகத்தில் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.

சித்த மருத்துவ அமைப்பு உருவான இடமாகத் திகழும் தமிழகத்தில், மருத்துவ கழகத்தை அமைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். சென்னை நகருக்கு அருகிலேயே அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைப்பதற்கான நல்ல சுத்தமான காற்று, ரயில் மற்றும் சாலை வசதி ஆகியவற்றுடன் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இதுதொடா்பாக, மத்திய அரசு கோரும் அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்து உரிய விவரங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைப்பதற்கு மிகுந்த விருப்பமாக உள்ளேன். எனவே, மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் வரும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com