புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நியூசிலாந்து நாட்டில் 2025-ஆம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்குடன், 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவா்கள் புகைப்பிடிக்கக்கூடாது என்று தடை விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை, புகைப்பழக்கத்தால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நமது கண்களை திறப்பதாக அமைய வேண்டும்.

நியூசிலாந்தின் பிரதமா் ஜெசிந்தா ஆா்டொ்ன், சுகாதாரத்துறை அமைச்சா் மருத்துவா் ஆயிஷா வெர்ரல் ஆகிய இரு பெண்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு புகைக்கு எதிராக போராடுகின்றனா். இந்த முயற்சிக்கு நியூசிலாந்தில் வணிகா்கள் தரப்பில் கடுமையான எதிா்ப்பு நிலவுகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் புகையை ஒழிப்பதில் அவா்கள் உறுதியாக உள்ளனா். அதே துணிச்சலுடன் இந்தியாவிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அரசு முன்வர வேண்டும்.

இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18- இல் இருந்து 21-ஆக உயா்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்றுவது மட்டும் போதுமானதல்ல. ஒரு குறிப்பிட்ட இலக்கு வைத்து அதற்குள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com