திருப்புவனம் சந்தையில் வரத்துக் குறைவால் ஆடு, கோழிகள் விலை அதிகரிப்பு

திருப்புவனம், காளையார்கோயில் ஆகிய இடங்களில் நடந்த சந்தைகளுக்கு ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனைக்குக் கொண்டு வராததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 
திருப்புவனம் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான ஆடுகள்.
திருப்புவனம் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான ஆடுகள்.

கரோனா 2வது அலை பரவல் காரணமாகத் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக கால்நடை வளர்ப்போர் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், காளையார்கோயில் ஆகிய இடங்களில் நடந்த சந்தைகளுக்கு ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனைக்குக் கொண்டு வராததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், காளையார்கோயில் ஆகிய இரு நகரங்கள் கால்நடை சந்தைகளுக்கு மிகவும் புகழ் பெற்றது. மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்க இங்கு அதிகமாகக் கூடுவது வழக்கம். இன்று  செவ்வாய்க்கிழமை திருப்புவனத்தில் சந்தை தொடங்கியும் போதிய அளவு ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்கு வரவில்லை. குறைந்த அளவு கால்நடைகள் வந்ததால் விலையும் கணிசமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. 

குறிப்பாக 5 கிலோ எடை கொண்ட ஆடு ரூ 5 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வியாபாரிகள் , பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் விலை உயர்வு காரணமாகச் சந்தையில் ஆடு, மாடுகள் வாங்க வந்து ஏமாற்றம் அடைந்தனர். 

திருப்புவனம் சந்தையில் ஆடு வாங்க வந்த மாரநாடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா  கூறுகையில், 

திருப்புவனம் சந்தைக்கு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வரும். வெயில் காரணமாகப் பல இடங்களில் கால்நடைகள் இறந்துவிட்டன. இதனால் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்ததால் விலை உயர்ந்துவிட்டது என்றார்.  

குருந்தன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம்  கூறுகையில், 

திருப்புவனம் சந்தைக்கு 3 ஆயிரம் ஆடுகள் வரை வரும், திருவிழாக்களுக்குத் தடை உள்ளிட்ட காரணங்களால் ஆடுகள் வரத்து குறைந்துவிட்டது. 20 கிலோ எடை கொண்ட ஆடுகள் 13 ஆயிரம் வரை விற்பனையாகும். இப்போது 6 கிலோ எடைக்குள் உள்ள ஆடுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார். 

மானாமதுரை சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளான சித்ரா பவுர்ணமியன்று கிடா வெட்டி நிலா வெளிச்சத்தில் விருந்துகள் நடைபெறுவது உண்டு, கரோனா 2வது அலை பரவல் காரணமாக விழாவிற்குத் தடை விதிக்கப்பட்டதால் பலரும் கால்நடைகளை வாங்காமல் தவிர்த்து விட்டனர். கிராமப்புற கால்நடை வளர்ப்பவர்களும் கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com